கோலாலம்பூர் – திருவோணம் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள அன்பர்கள் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“திருமால், வாமன அவதாரம் பூண்டு மகாபலிச் சக்கரவர்த்தியை அடக்கி ஆண்டுதோறும் மக்களைத் தான் காண வேண்டும் என்கிற அவரது வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார். அதன்படி மக்களைக் காணவரும் மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. வண்ண வண்ண கோலங்கள் இட்டு, அக்கோலத்தை வண்ணப் பூக்களால் அலங்கரித்தும், குத்து விளக்கேற்றியும் கலை மணம் கமழ மலையாள மக்கள் கொண்டாடுவதுதான் இந்த ஓணம் திருநாள். இப்பண்டிகையின்போது ஏழை எளிய மக்களுக்கு உணவும், உடையும் வழங்கி ஈகைத் தன்மையின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைப்பார்கள். பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும். அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத்தன்மை, சகோதர நேயம் பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்களைப் பேணி வளர்க்கப்பட வேண்டும்” என ஓணம் திருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சாதி, மத வேறுபாடின்றி சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை உணர்த்திடும் நன்னாள் திருவோணம் என்றும் குறிப்பிட்டுள்ள டாக்டர் சுப்ரமணியம், இந்த இனிய திருநாளில் மலேசியவாழ் மலையாள அன்பர்கள் அனைவருக்கும் தனது உள்ளம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி்க் கொள்வதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.