ஜகார்த்தா – இந்தோனிசியாவில் சுமத்ரா தீவின் மேற்கே கடலுக்கு அடியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று புதன்கிழமை மாலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
சுமத்ராவின் பாடாங் நகரின் தென்மேற்கே,805 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமத்ரா நேரப்படி நேற்று புதன்கிழமை மதியம் 12.49 (மலேசிய நேரப்படி 8.49) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேற்கு சுமத்திரா உட்பட சுமத்திராவின் பகுதிகள், வடக்கு சுமத்திரா, அசே ஆகிய இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியில் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர். சில இறப்புகளும் நேர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 2004-ம் ஆண்டு, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட 8.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமிப் பேரலைகள் எழுந்து, இந்தோனிசியா, இந்தியா உட்பட பல நாடுகளில் கடும் உயிர் சேதங்களை ஏற்படுத்தியது. சுமார் 200,000 பேர் சுனாமியில் சிக்கிப் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.