சென்னை – அதிமுக அரசின் பதவிக் காலம் இன்னும் சில வாரங்களில் முடிவடைய இருக்கும் நிலையில், ராஜிவ் காந்தி கொலைவழக்கில் இன்னும் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் 7 குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது அதிமுக அரசின் தேர்தல் வியூகமா அல்லது 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை உண்மையிலேயே விடுவிக்க தமிழக அரசின் எடுத்திருக்கும் நிலைப்பாடா என்ற விவாதங்கள் தற்போது தமிழக அரசியலில் எழுந்துள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த 7 பேரின் கருணை மனுக்களை ஏற்று அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என 7 குற்றவாளிகளில் ஒருவரான நளினி தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லையென்றால், இந்த 7 பேரின் விடுதலையும் சாத்தியமாகும்.