Home Featured நாடு அரசியல் பார்வை: “உள்ளே-வெளியே” – மகாதீர், மொகிதின் போராட்ட வியூகம்!

அரசியல் பார்வை: “உள்ளே-வெளியே” – மகாதீர், மொகிதின் போராட்ட வியூகம்!

488
0
SHARE
Ad

MUHYIDDIN YASSINகோலாலம்பூர் – அம்னோவிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஏற்கனவே அறிவித்திருக்க, நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் அம்னோவில் தொடர்ந்து நீடிப்பேன் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த இரு தலைவர்களும் பிரதமர் நஜிப்புக்கு எதிராக வகுத்துள்ள போராட்ட வியூகத்தின் ஒரு பகுதி வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

மொகிதினின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால், மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் இணைந்துள்ளது அவர்களும் இந்தப் போராட்டத்தில் மொகிதினுடன் கைகோர்த்துள்ளனர் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றது.

அதே வேளையில் மகாதீரோ, அம்னோவிலிருந்து வெளியே வந்து, நஜிப்புக்கு எதிராகப் போராடும் அரசியல், சமூக சக்திகளை ஒருங்கிணைப்பதிலும், அவர்களுக்கு நம்பிக்கைக்குரிய தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தனது பங்கை ஆற்ற முன்வந்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

லிம் கிட் சியாங்-மகாதீர் சந்திப்பு

Lim Kit Siangதனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற எத்தகைய தூரத்திற்கும் பயணம் செய்யத் தயாராக இருப்பவர் மகாதீர். அந்த வகையில், தனது பரம அரசியல் எதிரியான ஜசெகவின் தலைவர் லிம் கிட் சியாங்குடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அம்னோவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான டத்தோ சைட் இப்ராகிம் மார்ச் 27ஆம் தேதி ஏற்பாடு செய்யவிருக்கும் நஜிப்புக்கு எதிரான பேரணியிலும் கலந்து கொள்ளவிருப்பதாக மகாதீர் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளும் இந்தப் பேரணியில் இணையவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம்!

இதற்கிடையில் தனது மற்றொரு அரசியல் எதிரியான முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பிகேஆர் கட்சியுடனும் கைகோர்க்க முன்வந்திருப்பதன் மூலம், மலேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையை மகாதீர் ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பரில் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும், சிலாங்கூர் மாநில மந்திரிபெசாருமான அஸ்மின் அலியின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதன் மூலம், தனிப்பட்ட அரசியல் விருப்பு-வெறுப்புகளை மறந்து யாருடனும் அரசியலுக்காக இணையலாம் என்ற சித்தாந்தத்தை மீண்டும் மறு-உறுதிப்படுத்தியிருக்கின்றார் மகாதீர்.

azmin-ali2அஸ்மின் அலியுடன் நெருக்கமான உறவுகளை மகாதீர் பேணி வருகின்றார் என்றும் அவர் மூலமாகத்தான் பிகேஆர் கட்சிக்குள் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

தற்போது சிறையில் இருக்கும் அன்வார் இப்ராகிமும் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில், நஜிப்புக்கு எதிரான போராட்டத்தில் மகாதீருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

இதிலிருந்து, நஜிப்பை பதவியில் இருந்து அகற்றுவதுதான் மகாதீரின் நோக்கமே தவிர, அம்னோவை ஆட்சியிலிருந்து அகற்றுவதோ, அதற்கு மாற்றாக, மற்றொரு எதிர்க்கட்சியைக் கூட்டணியை உருவாக்குவதோ, தனது நோக்கமில்லை என்பதையும் மகாதீர் தெளிவுபடுத்தியுள்ளார். நஜிப் பதவி விலகினால், நான் மீண்டும் அம்னோவில் இணைவேன் என்ற அவரது அறிவிப்பே இதற்கான சான்றாகும்.

“உள்ளே-வெளியே”

nurul-izzahஇதிலிருந்து, மொகிதின் தலைமையிலான அணியினர் அம்னோவுக்குள் இருந்து கொண்டே தங்களின் போராட்டத்தைத் தொடர, மகாதீர் அம்னோவிற்கு வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் சக்திகளை ஒன்றிணைப்பதில் மும்முரமாக செயல்படுவார்.

ஆனால், மகாதீரும், எதிர்க்கட்சிகளும் ஓர் அம்சத்தில் முரண்பட்டு நிற்கின்றனர்.

நஜிப்பை பதவியில் இருந்து அகற்றுவதுதான் தனது நோக்கமாகக் கொண்டுள்ளார் மகாதீர். ஆனால், அம்னோவையும், தேசிய முன்னணியையும் ஆட்சியிலிருந்து, அகற்றி மாற்று அரசியல் களத்தை ஆட்சியில் அமர்த்த எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அனைத்துத் தரப்புகளும் ஒரு விஷயத்தில் ஒருமுகமான கருத்திணக்கத்தில் தற்போது இணைந்து கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது.

அரசியல் அதிகாரங்கள், பிரதமர் மற்றும் அரசு அமைப்புகளில் என ஒரே மையத்தில் குவிக்கப்பட்டிருக்கும் நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு, அரசாங்க அமைப்புகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நஜிப்புக்கு எதிராகத் திரண்டிருக்கும் அனைத்து தரப்புகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், அன்வார் இப்ராகிமின் புதல்வியுமான நூருல் இசா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்க அமைப்புகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர மகாதீர் போராடத் தயாராக இருந்தால் மட்டுமே, அவருடன் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கும் என்று கூறியிருக்கின்றார்.

இன்றைக்கு பிரதமர் என்ற பதவி அதிகாரத்தின் வசம் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் ஒரு காலத்தில் இதே மகாதீரால்தான் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதும் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம்!

சாஹிட் அடுத்த பிரதமர் – ஹிஷாமுடின் துணைப் பிரதமரா?

zahid-hamidi-hishamuddin-husseinசாஹிட் அடுத்த பிரதமர் – ஹிஷாமுடின் துணைப் பிரதமரா?

கடந்த சில நாட்களில் அரங்கேறியுள்ள அரசியல் காட்சிகள், மலேசிய அரசியல் களம் இதுவரை சந்தித்திராத சம்பவங்களாகவும், அறிவிப்புகளாகவும் அமைந்திருக்கின்றன.

இதன் மூலம், அம்னோவுக்கு உள்ளே ஓர் அணி – வெளியே ஓர் அணி – என்ற வலுவான அரசியல் போராட்ட வியூகம் நஜிப்புக்கு எதிராக வகுக்கப்பட்டிருக்கின்றது.

இனியும் நஜிப் தனது அரசியல் அதிகாரங்களின் மூலமே மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் – அதுவும் எத்தனை நாட்களுக்கு – என்ற எண்ணமும் மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.

உலக அரசியல் அரங்கிலும், நஜிப்பின் கௌரவமும், மரியாதையும், நம்பகத்தன்மையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

14வது பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில், சாஹிட் ஹாமிடியைப் பிரதமராக்கி விட்டு, ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்னை துணைப் பிரதமராக்கி விட்டு, தனது பதவியிலிருந்து ஒதுங்கிக்கொள்வதுதான் நஜிப்புக்கு இன்றைக்கு இருக்கும் ஒரே வழியாகப் படுகின்றது.

-இரா.முத்தரசன்