விழுப்புரம் – கூட்டணி அமைப்பதற்காக தாம் பேரம் ஏதும் பேசவில்லை என்றும், தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில் தமிழக அரசியல் கட்சிகள், தங்களது கூட்டணி வியூகத்தை எதிரணியின் முடிவை பொறுத்து அமைக்க காத்திருக்கின்றன.
அதிலும் குறிப்பாக விஜயகாந்தின் தேமுதிக, ஒருபுறம் பா.ஜனதா, மறுபுறம் திமுக, இன்னொரு பக்கம் மக்கள் நலக் கூட்டணி என மூன்று தரப்புக்கும் கூட்டணிக்கு வருவதாக ஆசை காட்டி முடிவை சொல்லாமல் இழுத்தடித்து வருகிறது.
பா.ஜனதாவிடம் பேசும்போது முதல்வர் வேட்பாளராக என்னை அறிவிக்க வேண்டும் என விஜயகாந்த் கேட்பதாகவும், திமுகவிடம் பேசும்போது துணை முதல்வர் பதவி கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், மக்கள் நலக்கூட்டணியோ விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயார் என்பதை ஏற்கனவே பலமுறை சூசகமாக கூட அல்லாமல் வெளிப்படையாகவே உணர்த்திவிட்டது.
ஆனாலும் எந்த அணிக்கும் பிடி கொடுக்காமல் விஜயகாந்த் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார். இது கூடுதல் சீட்களை பெறுவதற்கும் பேரத்தை அதிகரிப்பதற்குமான தந்திரம் என விஜயகாந்த் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தே.மு.தி.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய விஜயகாந்த், அவரது கூட்டணி நிலைப்பாடு குறித்த யூக செய்திகள் வெளியாவதற்காக பத்திரிகைகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “போராட்டம் நடத்தும் மக்கள் மீது மாநில அரசு அடக்கு முறையை ஏவிவிடுகிறது. சமீபத்தில் போராட்டம் நடத்திய மாற்று திறனாளிகள் மீது போலீஸை ஏவி தடியடி நடத்தியுள்ளது. காக்கி சட்டை அணிந்திருப்பவர்கள் மீது மரியாதையும், பயம் கொண்டுள்ளோம்.
ஆனால் அவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். வெள்ள நிவாரண நிதி மக்களை சென்று அடையவில்லை. ஆனால் இதை குறித்தெல்லாம் பத்திரிக்கைகள் எழுதுவது இல்லை.
நான் கூட்டணிக்கா பேரம் பேசுவதாக கூறி வருகிறார்கள். அது பொய், நான் கூட்டணிக்காக பேரம் பேசவில்லை. அதேபோல் கூட்டணி அமைப்பதற்காகவும் பயப்படவில்லை.
தே.மு.தி.க. குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக வரும் தகவல்கள் தவறு. தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.