சென்னை – சரத்குமார், தன் மீது கோரப்பட்ட பண மோசடி புகாருக்குப் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் இந்திய சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடக்கும் இந்தியக் குடிமகனாவேன். நான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளேன்.
நான் ஏற்கனவே ராஜ்ய சபை உறுப்பினராக இருந்துள்ளேன். நான் தற்போது தென்காசி சட்ட மன்ற உறுப்பினராக உள்ளேன். மேலும் நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக கடந்த 6 ஆண்டுகளும், தலைவராக கடந்த 9 ஆண்டுகளாக இருந்து வந்தேன்.
தற்பொழுதுள்ள புதிய நிர்வாகிகள் கேட்ட கணக்குகள் அனைத்தையும் நடிகர் சங்கத்தின் பொதுகுழுவால் நியமிக்கப்பட்ட தணிக்கையாளர் மூலமாக தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கேட்கப்பட்ட ஒவ்வொரு கடிதத்திற்கும் முறையாக விளக்கக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தில் எனது வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக எனது பெயருக்கும் , எனது புகழுக்கும் எனது கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் என் மீதும் மற்றும் ஏற்கனவே இருந்த இரண்டு அமைப்புக்கள் மீதும் காவல் ஆணையாளரிடம் பூச்சிமுருகன் ஊழல் புகார் ஒன்று கொடுத்துள்ளதாக ஊடகங்கள் மூலம் செய்தி பரப்பி வருகிறார்.
மேற்படி புகார் உண்மையில்லை. இச்செய்தியை பார்த்த பலர் அலைபேசி மூலம் என்னைக் கேட்டதின் பேரில் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன வேதனைக்கும் ஆளாகியுள்ளேன்.
பூச்சிமுருகன் தொடர்ந்து எனது எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதைத் தடுத்து அவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அந்த பதில் மனுவில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.