வாஷிங்டன் – பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவ புலனாய்வு முகமை இயக்குநர் வின்சென்ட் ஸ்டூவர்ட் கூறியதாவது:-
“பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் இருப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சி குறித்து கவலை அளிக்கிறது. இது விபத்தையோ, அசம்பாவிதத்தையோ ஏற்படுத்தும் என அஞ்சுகிறோம்.
பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிகரிக்கிறது. அது தனது திட்டங்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் ஏற்படும். ஐ.எஸ் அமைப்பும், அல்கொய்தாவும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன.
பாகிஸ்தானின் மேற்கு எல்லையோரத்தில் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கராச்சியில் துணை ராணுவப் படையினரின் நடவடிக்கைகள் வன்முறையைக் குறைப்பதில் ஓரளவு வெற்றியைத் தந்துள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற தூதரக மட்ட பேச்சுவார்த்தைகள், பேச்சு வார்த்தையைத் தொடர்வதற்கான ஒப்புதல்கள் ஆகியவை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை ஓரளவு குறைத்துள்ளன.
அதேசமயம், இந்தியாவில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால், எச்சரிக்கையுடன் கூடிய பதற்றம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மீண்டும் எழக்கூடும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.