சென்னை – தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க பாஜக மத்திய அமைச்சர் ஜவடேகர் சென்னை வந்திருக்கும் போது, விஜயகாந்த் அவரது சந்திப்பை தவிர்த்து விட்டு, தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு சென்ற விவகாரம் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் கூட்டணி பேரத்தில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளன. திமுக-காங்கிரஸ் கூட்டணி மட்டும்தான் இதுவரை உறுதியாகியிருக்கும் வேளையில், பாஜகவும், திமுகவும் எப்படியாவது விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று பேரம் பேசிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், சமீபத்தில் சென்னை வந்து விஜயகாந்தை சந்தித்து பேசினார். ஆனாலும் பாஜக-தேமுதிக இடையே உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
விஜயகாந்த் வைத்த கோரிக்கைகளை மேலிடத்தில் பரிசீலித்து சொல்வதாக ஜவடேகர் கூறிசென்றதாக தெரிகிறது. எனினும், பாஜகவுடன்தான் கூட்டணி என்று விஜயகாந்த் அறிவிப்பார் என்று பாஜகவினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், ஜவடேகரை சந்தித்தது, ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. இதனால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர். ஒரு பக்கம் திமுக, விஜயகாந்திடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால், தேமுதிகவிற்கு 78 தொகுதிகள், துணை முதல்வர், அமைச்சரவையில் பங்கு மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 50 சதவிகித இடம் என்ற கோரிக்கையை திமுக முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாக தெரிகிறது. அதிகபட்சம் தேமுதிகவிற்கு 54-60 சீட் வரை கொடுக்கலாம் என கருணாநிதி நினைக்கிறார்.
ஆனால் விஜகாந்த் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் திமுக-தேமுதிக கூட்டணி பேச்சு இன்னும் இழுபறியில் இருக்கிறது. இது தெரிந்து கொண்ட பாஜக, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என ஏற்றுக்கொள்வதுடன், 130 தொகுதிகள் வரை தருகிறோம் என்று கூறி பேரத்தை தற்போது ஆரம்பித்துள்ளது.
அதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படியிருக்க, கடந்த சில நாட்களாக, திடீரென தேமுதிக-திமுக கூட்டணி ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டது போன்ற தோற்றம் நிலவி வருகிறது. அதனால்தான் ‘விஜயகாந்த் எங்களை கை விட்டாலும் மக்கள் எங்களை கைவிட மாட்டார்கள்’ என்று வைகோ கூறியுள்ளார்.
மேலும், விஜயகாந்திடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார். விஜயகாந்த் மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை சந்தித்து பேசி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியை அப்படியே தொடரச் செய்யவேண்டும் என்பது பாஜகவின் திட்டம்.
ஆனால் விஜயகாந்தோ, ஜவடேகரின் சந்திப்பை தவிர்த்து விட்டு, திடீரென தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியம் சென்றுவிட்டார். இதனால் ஜவடேகர் மற்றும் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எப்படியாவது விஜயகாந்தை வழியில் மடக்கியாவது பேசி விட வேண்டும் என்று பாஜக தரப்பு விரும்புகிறதாம். விஜயகாந்தின் செயல்பாட்டை பார்க்கும்போது, திமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டது என்பது போல் தெரிகிறது.