பெங்களூரு – பிரபல தொழிலதிபரும், மாநிலங்களவை உறுப்பினருமான விஜய்மல்லைய்யா, தான் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.1,500 கோடி உள்பட 17 வங்கிகளில் ரூ.7,800 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பி கேட்டு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
இதனிடையே மல்லையா தனக்கு சொந்தமான யுனேடட் ஸ்பிரிட்ஸ் கம்பெனியை பிரிட்டனில் உள்ள டைஜியோ நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். பின்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதையேற்று கொண்ட நிர்வாகம் அவரை விலக அனுமதி வழங்கியதாக அறிவித்தது. மேலும் கம்பெனி பங்கு தொகையாக ரூ.515 கோடி வழங்குவதாக அறிவித்தது.
இதை தெரிந்தகொண்ட வங்கிகள், மல்லையாவுக்கு கிடைக்கும் பங்கு தொகையில் இருந்து தங்கள் கடனாக வழங்கிய பணத்தைபெற்று கொள்ள தீர்மானித்தன. இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் தலைமையில் ஆக்சிஸ் பாங்க் உள்பட 17 வங்கிகள் சார்பில் பெங்களூருவில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நான்கு சிறப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி பெனகனஹள்ளி முன் விசாரணைக்கு வந்தது.பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘விஜயமல்லையா 17 வங்கிகளுக்கு ரூ.7.800 கோடி பாக்கிவைத்துள்ளார். ஆகவே யு.பி. தலைவர் பொறுப்பில் விலகுவதின் மூலம் கிடைக்கும் ரூ.515 கோடி முடக்கப்படுகிறது.
அந்த பணத்தை மல்லையாவுக்கு டைஜியோ நிறுவனம் தரக் கூடாது. வங்கிகளுடன் பேசி, மல்லையா கடனை திருப்பி செலுத்த வேண்டும்’’ என்றார். மல்லையாவுக்கு புது நெருக்கடியாக, ஐடிபிஐயி்ல் ரூ.900 கோடி கடனாக பெற்று கட்டாதது தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை நிதி மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது.