அதனையடுத்து, நடத்தப்பட்ட உலக அளவிலான தீவிரத் தேடுதல் வேட்டையிலும், செயற்கைக் கோள் தகவலின் அடிப்படையிலும், எம்எச்370 விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக, 2014-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.
அதனையடுத்து, இந்தியப் பெருங்கடலில் இன்று வரை தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.
நவீன தொழில்நுட்பங்களுக்கெல்லாம் சவாலாகவும், உலகத்தையே ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கும், இந்தப் பேரிடருக்கான மர்மம் மட்டும் இன்னும் விலகாமல் இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
இந்நிலையில், இன்று எம்எச்370 இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், எம்எச்370 மர்மத்தைக் கண்டறிய அரசாங்கம் இன்னும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அப்படி கண்டுபிடிக்க இயலாமல் போனால், ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா ஆகிய மூன்று நாடுகளும் மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாகம்:
இந்தியப் பெருங்கடலில் எம்எச்370 விமானம் இறுதியாக விழுந்து நொறுங்கியதாக நம்பப்பட்ட இடத்தில் ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகள், மற்ற வளர்ந்த நாடுகளின் உதவியோடு, அதிநவீன கருவிகளைக் கொண்டு, கடந்த ஆண்டு ஆழ்கடலில் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வந்தது.
அந்த நேரத்தில், திடீர் திருப்பமாக பிரஞ்சு இந்தியப் பெருங்கடல் பகுதிகளைச் சேர்ந்த தீவான ரீயூனியனில், விமானத்தின் இறக்கையின் ஒருபகுதி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம், மொசாம்பிக் தீவில் எம்எச்370 பாகத்தின் ஒரு பகுதி என நம்பப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
புதிதாகக் கிடைத்துள்ள இந்த இரண்டு பாகங்களும், விமானத்தின் சிதறிய பாகங்கள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்படும் இடங்களாக அதிகாரிகள் வரைந்துள்ள மாதிரியுடன் ஒத்துப் போவதால், அவை எம்எச்370 பாகங்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதற்கான விசாரணையும் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றது.