புதுடெல்லி – தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ்யசபாவில் அதிமுக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா கோரிக்கை விடுத்தார்.
பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெயலலிதாவிற்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என சசிகலா புஷ்பா பேசினார். இவர் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்தவர். அந்த பதவியை ராஜினாமா செய்த பின்னர் அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.
மேலும் அதிமுக மகளிர் அணிச் செயலாளராக இருந்த இவரை ஜெயலலிதா கடந்த ஜனவரி மாதம் அதிரடியாக கட்சி பதவியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில் அவர் தனது கட்சி தலைமையின் கவனத்தை பெறுவதற்கே பாரத ரத்னா விருது ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் மகளிர் தினமான நேற்று மக்களவையிலும் பேசிய அதிமுக பெண் உறுப்பினர்கள் ஜெயலலிதாவையும், அவரது திட்டங்களையும் பற்றி புகழ்ந்துரைத்தனர்.