வாஷிங்டன் – அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் முதல்முறையாக குதித்துள்ள பெரும் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வெற்றிகளை குவித்து, உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் மிசிசிப்பி, மிச்சிகன், ஹவாய் ஆகிய 3 மாகாணங்களில் வெற்றி பெற்றார்.
அவருக்கு போட்டியாக திகழ்ந்து வரும் டெட் குரூசுக்கு இடாஹோ மாகாணத்தில் வெற்றி கிடைத்தது. குடியரசு கட்சியின் மற்றொரு போட்டியாளரான புளோரிடா எம்.பி., மார்க்கோ ரூபியோவுக்கு மிச்சிகன், மிசிசிப்பி மாகாணங்களில் 4-ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.
இந்த வெற்றியின்மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தனது வாய்ப்பை டிரம்ப் மேலும் பிரகாசம் ஆக்கி உள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் லாரி கிளிண்டனுக்கு மிச்சிகன் மாகாணத்தில் அதிர்ச்சி தோல்வி கிடைத்தது.
ஆனால் அதையெல்லாம் ஈடு செய்கிற விதத்தில் அவர் மிசிசிப்பி மாகாணத்தில் அபார வெற்றி பெற்றார். அவரது அரசியல் எதிரியான பெர்னி சாண்டர்ஸ், மிச்சிகன் மாகாணத்தை கைப்பற்றி உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியில் டிரம்ப் கை ஓங்கி வருகிறது. ஜனநாயக கட்சியில் லாரி தன் செல்வாக்கை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.