Home Featured இந்தியா பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

566
0
SHARE
Ad

vijaymallya.புதுடெல்லி – பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தற்போது தலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான உற்பத்தி, விமானப் போக்குவரத்து என பல்வேறு துறைகளில் தொழிலதிபரானவர் விஜய் மல்லையா. பெங்களூரைச் சேர்ந்த இவர் தனக்குச் சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை, பிரிட்டனைச் சேர்ந்த டியாஜியோ நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். இதற்கென டியாஜியோ நிறுவனத்திடம் இருந்து அவர் ரூ. 515 கோடியை பெற்றார்.

ஆனால், இந்தத் தொகையை வங்கியில் இருந்து எடுப்பதில் விஜய் மல்லையாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே, தனது நிறுவனங்கள் பேரில் விஜய் மல்லையா வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அவர் திரும்பச் செலுத்தவில்லை என அவருக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

#TamilSchoolmychoice

அதில், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்; அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்’ என வங்கிகள் வலியுறுத்தியிருந்தன. ஆனால், தனது பாஸ்போர்ட் முடக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார் விஜய் மல்லையா. இதனை வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசே தெரிவித்தது.

இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறுகையில், ‘சிபிஐ அதிகாரிகள் மார்ச் 2-ஆம் தேதியே விஜய் மல்லையா வெளிநாடு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு வங்கிகளில் 9,000 கோடிரூபாய் கடன் பெற்றுள்ள அவர் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளார்.

அவருக்கு எதிராக பெங்களூரு கோவா நகரங்களில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. தற்போது விஜய் மல்லையாவுக்கு வெளிநாடுகளிலும் சொத்துக்கள் உள்ளன. அவை இந்த கடன் தொகையை விட அதிக மதிப்பு கொண்டவை’ என்றார்.

அதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘வங்கிகள் தாக்கல் செய்த மனுவுக்கு விஜய் மல்லையா இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். மார்ச் 30-ஆம் தேதிக்குள் அவர் தனது பாஸ்போர்ட்டோடு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

மேலும், தற்போது விஜய் மல்லையா பிரிட்டனில் இருப்பதாகக் கூறப்படுவதால் இந்த மனுவை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவோ அவரது அலுவல் ரீதியிலான ‘இ – மெயில்’ முகவரி மூலமாக அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.