துபாய் – துபாயில் இடியுடன் கொட்டிவரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கடந்த 7 மணி நேரத்தில் மட்டும் 253 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா நாடான துபாய் உட்பட்ட ஐக்கிய அரபு குடியரசில் கடந்த சில மணி நேரங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை மேலும் தொடரும் என்று ஐக்கிய அரபு குடியரசு வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை நீடிப்பதால் துபாய் நகர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
துபாயில் நேற்று வீசிய புயல் அதனைத் தொடர்ந்து கொட்டிய கனமழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 7 மணிநேரத்தில் 253 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும் உதவி கோரி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். கன மழை காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் பள்ளிகள் மூடப்பட்டன. ஏரளாமான வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
சாலையில் ஆறு போல் வெள்ளம் பெருகி கார்களை அடித்துச் சென்றன. அடிக்கும் புயல் காற்றுக்குத் தாங்காமல், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், இணைய பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.
அடுக்குமாடிகள், நட்சத்திர விடுதிகள் எல்லாம் காற்று மழைக்கு தாக்குபிடிக்கமுடியாமல் ஜன்னல்கள்,கதவுகள் உடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.
அல் பயானில் உள்ள புஜைரா பள்ளத்தாக்கில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் கடலில் 10 அடி உயரத்திற்கு அலை எழும்பும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று சில பகுதிகளில் 110 மி.மீ அளவு மழை செய்துள்ளதாகவும், மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் புயல் வீசியதாகவும் ஐக்கிய அரபு குடியரசின் தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், ஐக்கிய அரபு குடியரசின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று பெருமளவு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
https://youtu.be/P3zDW-LX_xs