சிங்கப்பூர்: தூய்மையான அரசியலுக்குப் பெயர்போன சிங்கப்பூரில், அண்மையக் காலத்தில் இல்லாத சம்பவமாக, பிஏபி கட்சியின் புக்கிட் பத்தோக் நாடாளுமன்ற உறுப்பினரான டேவிட் ஓங் (படம்) தனது சொந்தப் பிரச்சனைகளைக் காரணம் காட்டி, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார்.
அந்தத் தொகுதியில் கூடிய விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்துள்ள டேவிட் ஓங்குக்குப் பதிலாக ஜூரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் லீ, புக்கிட் பத்தோக் தொகுதியின் பிரச்சனைகளைக் கவனித்து வருவார் என்றும் பிரதமர் லீ அறிவித்துள்ளார். டெஸ்மண்ட் லீ உள்துறை அமைச்சுக்கும், தேசிய மேம்பாட்டுக்குமான மூத்த அமைச்சராவார்.
டேவிட் ஓங் ராஜினாமா ஏன்?
தனது சொந்தப் பிரச்சனைகள் காரணமாக ராஜினாமா செய்வதாகவும் அதற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ள டேவிட் ஓங், கட்சி, தனது குடும்பம், தொகுதி மக்கள் ஆகியோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இணையத் தளங்கள் டேவிட் ஓங் குறித்த ‘சூடான’ செய்திகளால் தெறிக்கின்றன….
டேவிட் ஓங் சார்ந்துள்ள பிஏபி கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவருடன் அவர் தகாத உறவு வைத்துக் கொண்டார் என சிங்கையின் தகவல் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பிஏபி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களில் ஒருவரான அந்தப் பெண்மணி ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த ஆறு மாத காலமாக நீடித்து வந்த இந்த தகாத தொடர்பு, சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர் புகார் கூறியதைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தப் பெண்மணியின் அடையாளங்களையும் பெயரையும் கூட சில இணைய செய்தித் தளங்கள் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் டேவிட் ஓங் தொடர்பான விவகாரத்திற்காக புக்கிட் பத்தோக் தொகுதி மக்களிடம் தாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக, சிங்கையின் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் கொண்டுள்ளார். நாங்கள் எதிர்பாராத ஒன்று இதுவெனவும் தர்மன், டேவிட் ஓங் ராஜினாமா குறித்து வர்ணித்துள்ளார்.