சிங்கப்பூர் – சர்ச்சையில் சிக்கி புக்கிட் பத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து டேவிட் ஓங் (படம்) விலகியுள்ளதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடவிருக்கின்றன.
ஜூரோங் ஜிஆர்சி நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் ஆங் வெய் நெங், ஜூரோங்-கிளெமெண்டி நகரசபையில் தலைவராகப் பொறுப்பேற்று இனி, புக்கிட் பத்தோக் தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் சேவையாற்றுவார் என சிங்கை துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புக்கிட் பத்தோக் தொகுதியில் 73.02 சதவீத வாக்குகள் வாக்குகள் பெற்று பிஏபி கட்சியின் டேவிட் ஓங் வெற்றி பெற்றார். சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சதாசிவம் வீரையா 26.4 சதவீத வாக்குகள் பெற்றார். சுயேச்சை வேட்பாளரான சமீர் சலிம் நெஜி 0.6 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
இடைத் தேர்தல் நடைபெறும்போது போட்டியிட உத்தேசித்துள்ளதாக எஸ்டிபி எனப்படும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிங்கப்பூர் டெமோக்ரெடிக் பார்ட்டி) போட்டியிடும் என அதன் தலைமைச் செயலாளர்சீ சூன் ஜூவான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கட்சியான பியூப்பல் பவர் பார்ட்டி (மக்கள் சக்தி கட்சி) எஸ்டிபியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும் என அறிவித்துள்ளது.