திருமலை – பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் சுவாமி நித்தியானந்தா பற்றிய செய்திகள் என்றால் இன்னும் மக்களுக்கு சுவாரசியமும் ஈர்ப்பும் இருக்கவே இருக்கின்றது. அவரும் தொடர்ந்து தகவல் ஊடகங்களுக்கு ஏற்றவாறு தீனிஅளித்து வருகின்றார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (மார்ச் 11) திருப்பதி எழுமலையான் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட 15 சீடர்களுடன் வருகை தந்தது மீண்டும் தமிழக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
முதலில் முக்கிய பிரமுகர்களுக்கான (விஐபி) அனுமதியின் கீழ் தரிசனம் செய்ய நித்தியானந்தா சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், ஆலய நிர்வாகம் அவரது மொத்த குழுவினரும் விஐபி தரிசனம் செய்வதற்கு மறுத்து விட்டதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, நித்தியானந்தா மட்டும் ஒரு சீடருடன் முக்கிய பிரமுகர் வரிசையில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் 15 சீடர்களும் 300 ரூபாய் டிக்கெட் எடுத்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
நித்யானந்தா கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக திருப்பதி வந்துள்ளார்.
திருப்பதிக்கு சில மணி நேர பயணத் தொலைவிலுள்ள, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் ஆலயத்திலும் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா மற்றும் சீடர்கள் உட்பட தரிசனம் செய்தார்.
நித்தியானந்தா சென்ற இடங்களில் எல்லாம் பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் அவரை மொய்த்துக் கொண்டு படம் எடுக்க முற்பட்டனர். அதுவும் ரஞ்சிதாவுடன் சென்றால் கேட்கவா வேண்டும்?
சில இடங்களில் அவரது சீடர்கள் புகைப்படம் எடுப்பதிலிருந்து பத்திரிக்கையாளர்களைத் தடுக்க முயன்றதால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதமும் அதனால் சலசலப்பும் ஏற்பட்டது.
திருப்பதிக்கு தரிசனம் செய்ய வியாழக்கிழமை இரவே தனது குழுவினருடன் நித்தியானந்தா வந்திருந்தார். முதலில் அவர்கள் முக்கிய பிரமுகர்கள் தங்கும் விருந்தினர் அறையில் தங்குவதற்கு கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்களுக்கு அறைகள் கிடையாது என ஆலய அதிகாரிகள் கூறிவிட்டனர்.
பிறகு மற்ற விருந்தினர் அறைகளில் அவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை நித்யானந்தா ஒரு சீடருடன் சென்று தரிசனம் செய்தார். வெள்ளிக்கிழமையன்று மதியம் ரஞ்சிதா உட்பட 15 சீடர்கள் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
ரஞ்சிதா துறவிக் கோலத்தில் கழுத்தில் ருத்ராட்சம் மாலை, விபூதி அணிந்து வந்திருந்தார். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைக் காண பக்தர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.