கான்பெரா – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை, ஊழல் விவகாரங்கள் குறித்து பேட்டி எடுக்க முயன்ற ஆஸ்திரேலியப் பத்திரிக்கையாளர் ஒருவரும் புகைப்படக்காரர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் (படம்) மலேசிய அரசாங்கத்தைத் தொடர்பு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நஜிப் கூச்சிங் நகருக்கு வருகை தந்து, அங்கு சாலையொன்றில் நடந்து சென்ற போது அவரை அணுகி அந்தப் பத்திரிக்கையாளர்கள் இருவரும் பேட்டி எடுக்க முயன்றனர். நஜிப்பின் ஊழல் குறித்த விவகாரங்கள் மீதும் நஜிப்பிடம் கேள்விகள் தொடுக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மலேசியக் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய புரோட்காஸ்ட்டிங் கொர்ப்பரேஷன் என்ற தகவல் ஊடகம், காவல் துறையினரால் அந்த இருவரும் ஆறு மணி நேரம் கூச்சிங்கிலேயே தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்களா என்பது இன்று தெரியவரும் என்று அறிவித்தது.
இது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மலேசிய அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளது என ஆஸ்திரேலிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் கூறிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் “ஆஸ்திரேலியா பேச்சு சுதந்திரத்தை ஆதரிக்கின்றது. மலேசிய அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களை அணுகி எங்கள் தரப்பை எடுத்து விளக்குவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய தூதரகம் அந்தப் பத்திரிக்கையாளர்களுக்காக வாதாட வழக்கறிஞர் ஒருவரை நியமித்துள்ளது. அந்த இருவரின் கடப்பிதழ்கள் (பாஸ்போர்ட்) நேற்று அவர்களிடம் திரும்பவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்களா என்பது இன்று தெரியவரும் என்றும் அதுவரை அவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அவர்களின் வழக்கறிஞரான ஆல்பர்ட் தாங் தெரிவித்துள்ளார்.
அந்தப் பத்திரிக்கையாளர் 39 வயதான லிண்டன் பெஸ்ஸர் என்றும் புகைப்படக்காரர் 51 வயதான லூயிஸ் எரோகுலு என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலிய புரோட்காஸ்ட்டிங் கொர்ப்பரேஷன் (ஏபிசி) நிறுவனத்தைப் பிரதிநிதிப்பவர்களாவர்.