கோலாலம்பூர் – பிரதமர் பதவியிலிருக்கும் ஒருவர் அப்பதவியிலிருந்து விலகிய பின்னர், துணைப்பிரதமராக இருப்பவர் பிரதமர் பொறுப்பை ஏற்பது என்பது வழக்கத்தின் அடிப்படையில் தானே தவிர சட்டப்படி கிடையாது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
“2009-ம் ஆண்டு (அப்துல்லா அகமட் படாவி) பதவி விலகியபோது, துணைப்பிரதமராக இருந்த நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பதவியை ஏற்றார்”
“இது வழக்கத்தின் அடிப்படையில் நடப்பது தானே தவிர, குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
அம்னோ தேசிய உதவித் தலைவரான அகமட் சாஹிட் ஹமீடி தான் தற்போது துணைப்பிரதமராகப் பதவி வகிக்கின்றார்.
ஒருவேளை நஜிப் பதவி விலகும் பட்சத்தில், அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், பிரதமர் பதவியைக் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதற்குப் பதிலளிக்கும் வகையில் மகாதீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தனது பதவிக் காலம் முடியும் முன்னரே அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.