வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் 2 மாகாணங்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதால் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வரும் நவம்பர் 8–ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.
குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் (வயது 69) கை ஓங்கி வந்தது. ஆனால் அவர் தொடர்ந்து சர்ச்சைக்கு இடம் அளிக்கிற வகையில் பேசி வருகிறார். அவருக்கு எதிராகவும் ஒரு அலை அமெரிக்காவில் உருவாகி வருகிறது.
நேற்று முன்தினம் வாஷிங்டன் மாகாணத்திலும், வயோமிங் மாகாணத்திலும் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 2 மாகாணங்களிலும் டிரம்ப் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
இது அவருக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. ஏனெனில் அவருக்கு சரியான போட்டியை அளித்து வருகிற டெட் குரூஸ் வயோமிங் மாகாணத்திலும், மார்க்கோ ரூபியோ வாஷிங்டன் மாகாணத்திலும் வெற்றி பெற்றனர்.
வாஷிங்டனில் டிரம்ப் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் டெட் குரூஸ் பிரதிநிதிகள் ஆதரவை பொறுத்தமட்டில் 9 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற்றுள்ளார். ரூபியோ 10 பிரதிநிதிகள் வாக்குகளை பெற்றிருக்கிறார்.
குடியரசு கட்சி வேட்பாளர் ஆவதற்கு மொத்தம் 1,237 பிரதிநிதிகள் ஆதரவை பெற வேண்டும். டிரம்ப் அதிகபட்சமாக 460 பிரதிநிதிகள் ஆதரவை பெற்று முன்னணியில் உள்ளார். ஆனால் அவரை துரத்தி வருகிற டெட் குரூஸ் 367 பிரதிநிதிகள் ஆதரவை பெற்று விட்டார். அதுமட்டுமல்ல டிரம்பை 6 மாகாணங்களில் அவர் வீழ்த்தி உள்ளார்.
புளோரிடாவில் நாளை (15–ஆம் தேதி) குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல் நடக்கிறது. இது மார்க்கோ ரூபியோவின் சொந்த மாகாணம். இங்கு அவர் ஒருவேளை தோல்வியை தழுவினால் தொடர்ந்து வேட்பாளர் போட்டியில் நீடிப்பது கடினமாகி விடும்.
சிகாகோவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியாளர் டொனால்டு டிரம்ப் பிரச்சார கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் டல்லாஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி நன்கொடையாளர்கள் கூட்டத்தில் அதிபர் ஒபாமா பேசினார். அப்போது அவர், ‘‘அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட எண்ணி களத்தில் குதித்து இருப்பவர்கள் அவமதிக்கிற வகையில் நடந்து கொள்ளக்கூடாது, பிற அமெரிக்கர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடாது’’ என எச்சரித்தார்.