கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் பொதுமக்கள் தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் பொழுது, இரண்டு ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் அவரை நெருங்கி கேள்வி கேட்டதில் என்ன தவறு? என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களை காவல்துறை கைது செய்திருக்கத் தேவையில்லை என்றும், அந்த நடவடிக்கை அவர்களைக் கேட்க விடாமல் தடுப்பது போலவும் இருப்பதாக கஸ்தூரி பட்டு தெரிவித்துள்ளார்.
அந்தக் கேள்விகளெல்லாம் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், மலேசியர்கள் கேட்க வேண்டிய கேள்விகள் என்றும் கஸ்தூரி பட்டு குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரு செய்தியாளர்களும் நஜிப்பிடம் மிகவும் “ஆக்ரோஷமாக” நடந்து கொண்டதே கைதிற்குக் காரணம் என்று சரவாக் காவல்துறை தெரிவித்துள்ளது.
எனினும், அது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள துணை உள்துறை அமைச்சர் நூர் ஜஸ்லான் மொகமட், அந்த இரு செய்தியாளர்களும் குடிநுழைவுச் சட்டத்தை மீறியதால் தான் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.