கோலாலம்பூர் – தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட சீனப் பாடகரான வில்லியம் சியாவிற்கு, புகழ்பெற்ற பாடகி எஸ்.ஜானகியைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், தனது தமிழக நண்பர்கள் மூலமாக அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்ட அவர், மலேசியாவிலிருந்து தமிழ்நாட்டிற்குச் சென்று அங்கு ஜானகி அம்மாவின் வீட்டில் நேற்று அவரைச் சந்தித்துள்ளார்.
அவருக்குப் பாத பூஜை செய்து வணங்கி, அவரிடமிருந்து அன்பையும் ஆசியையும் பெற்றுள்ளார் வில்லியம் சியா. தன்னுடன் தனது நண்பர் ஹரிராஸ்குமாரையும் அழைத்துச் சென்ற வில்லியம், ஹரீஸ்குமார் வரைந்த ஓவியத்தையும் பரிசாக அளித்துள்ளார்.
“என் கனவுகள் நிறைவேறியத் தருணமிது… சிறு வயது முதல் குரலரசி ஜானகி அம்மாவின் பாடல்களைக் கேட்டு, அதன்பால் நான் கொண்ட காதல் பயணம் இன்றுத் தனது உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது… அந்த இளம் குரலின் இதமான கானங்கள் ஒலித்த திசையெல்லாம் கௌரவபடுத்தப்பட்டவை என்று சொல்வதில் எள்ளளவும் ஐயமில்லையெனில், அந்த குரலுடையாலின் இல்லத்திலே நின்று அவரோடு படம் எடுத்துக்கொள்வதென்பது எளிதில் கிடைக்காததொரு பாக்கியம்… அந்த பாக்கியத்தை எனக்குப் பெற்றுத் தந்த வில்லியம் சியாவிற்கு எனது மனமார்ந்த நன்றி… வார்த்தைகள் இல்லை உமக்கு நன்றி மொழி உரைக்க நண்பா… அம்மாவோடு நான் எடுத்துக்கொண்ட ஒரு சில படங்கள் இதோ… அதிலும் குறிப்பாக நான் வரைந்த அவரது ஓவியத்தைப் பார்த்து அவர் அடைந்த ஆனந்தம், என்னை உவகை மலையின் உச்சியில் கொண்டு போய் நிறுத்திவிட்டது… நன்றி அம்மா…” என்று மகிழ்ச்சி பொங்க ஹரிராஸ்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் படங்களுக்கு: Willian Chia, Hariraaskumar Hari பேஸ்புக் பக்கங்களில் காணலாம்.
தொகுப்பு: செல்லியல்