புதுடெல்லி – உத்தரகண்ட் மாநிலத்தில் ஆர்ப்பாட்டத்தின்போது குதிரையின் காலை உடைத்து துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷியை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி வலியுறுத்தினார்.
மசூரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கணேஷ் ஜோஷி, பாஜக சார்பில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸாரின் குதிரையை தடியால் தாக்கினார்.
இதில் அந்தக் குதிரையின் பின்னங்கால் ஒன்று முறிந்தது. இதுதொடர்பான காட்சிகள், தொலைக்காட்சிகளில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் மேனகா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜகவில் இருந்து அவரை (கணேஷ் ஜோஷியை) நீக்கும்படி கட்சிக்கு கடிதம் எழுதியுள்ளேன்’ என்றார். “விலங்குகளுக்காக மனிதர்கள்’ என்ற தன்னார்வை அமைப்பை மேனகா காந்தி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், விலங்குகள் நல ஆர்வலர் அமைப்பான பீட்டாவும், பாஜக தலைவர் அமித் ஷா, உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, கணேஷ் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.