Home Featured உலகம் அமெரிக்காவில் வடகொரிய அரசின் சொத்துக்கள் முடக்கம் – ஒபாமா அதிரடி!

அமெரிக்காவில் வடகொரிய அரசின் சொத்துக்கள் முடக்கம் – ஒபாமா அதிரடி!

524
0
SHARE
Ad

obamaவாஷிங்டன் – தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடியாக, அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்களை முடக்கி அதிபர் ஒபாமா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், அனைத்துலக உடன்படிக்கைகளை புறக்கணித்து வடகொரியா 2006-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

3 முறை அணு குண்டுகளை வெடித்து சோதித்த அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அதிரடியாக அணு குண்டை விட அதிபயங்கர சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதற்காக உலக நாடுகள், வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

மேலும், பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை மூலம் விண்வெளியில் ஏவியதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் அது ஏவுகணை சோதனை என்று கருதப்பட்டு, அதற்கும் உலக நாடுகளின் கண்டனங்கள் குவிந்தன.

ஆனால் வடகொரியா அதற்கும் அசரவில்லை. அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்துகிற சிறிய அளவிலான அணுகுண்டுகளையும் தயாரித்திருப்பதாக அறிவித்து உலக அரங்குக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக அந்த நாடு அறிவித்தது. ஏற்கனவே ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதற்காக வடகொரியா மீது ஐ.நா. சபை கடுமையான பொருளாதார தடைகளை விதித்து கடந்த 2-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில் வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடி தருகிறவிதமாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடியாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும். வடகொரியாவில் அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கு தடை. வடகொரியாவில் அமெரிக்கா முதலீடு செய்ய தடை.

வடகொரியாவுடன் தொடர்பு வைத்துள்ள எந்தவொரு நபர்மீதும், அவர் அமெரிக்கர் அல்லாதவராக இருந்தாலும் அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், “வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை அந்த நாட்டு மக்களை குறிவைத்து பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் அது அந்த நாட்டின் தலைமை மீதுதான் குறிவைத்து பிறப்பிக்கப்பட்டுள்ளது” என ஒபாமா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.