தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.
இவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது இந்த அமைப்பு. டென்மார்க் நாடு, உலகில் அதிகமான மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் நாடாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நாடு மகிழ்ச்சியான நாடு பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு டென்மார்க் நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் அயர்லாந்து உள்ளது. நார்வே, பின்லாந்து, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் 10 மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலகின் மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் டென்மார்க் தொடர்ந்து முதன்மை இடத்தில் இருந்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்திருக்கும் நாடுகளில் தனி மனித நலனுக்கு அந்த நாடுகளின் அரசுகள் முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சோமாலியா இந்தப் பட்டியலில் 76-ஆவது இடத்தில் உள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா மகிழ்ச்சி பட்டியலில் 13-ஆவது இடத்தில் உள்ளது.
ஜெர்மனி 16-ஆவது இடத் திலும், இங்கிலாந்து 23-ஆவது இடத்திலும், ஜப்பான் 53-ஆவது இடத்திலும், ரஷியா 56-ஆவது இடத்திலும் இருக்கின்றன. பெரும்பாலான வல்லரசு நாடுகள் மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளன.
தீவிரவாதிகளின் பிடியிலும், பழமை வாதிகளின் கையிலும் சிக்கியுள்ள நாடுகளில் மகிழ்ச்சி என்பதே இல்லை என்பது உறுதியாகி உள்ளது. கருத்து கணிப்பு நடந்த 156 நாடுகளில் 154-ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. கடைசி இடமான 156-ஆவது இடத்தில் சிரியா நாடு உள்ளது.