டேராடூன் – ஒரு கலவரத்தை அடக்க போலிசார் முயற்சி மேற்கொண்ட போது, போலீஸ் குதிரையின் காலை கம்பால் அடித்து சேதப்படுத்திய பாஜக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடெங்கிலும் இந்த சம்பவத்தால் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட வேண்டுமென பாஜக அமைச்சர் மேனகா காந்தி அறைகூவல் விடுத்திருந்தார். மிருக நல ஆர்வலரான நடிகை திரிஷாவும் தனது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.
செயற்கைக் கால் பொருத்தப்பட்ட சக்திமான் குதிரை
இதற்கிடையில், கணேஷ் ஜோஷியின் தாக்குதலால் காயமடைந்த சக்திமான் என்ற பெயர் கொண்ட அந்த 14 வயது குதிரை இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டது.
ஆனாலும், சோகம் என்னவென்றால், அந்த சட்டமன்ற உறுப்பினரின் மோசமானத் தாக்குதலால் அதன் கால் சிதைந்து போன நிலையில் அந்தக் குதிரையின் சிதைந்த கால் தற்போது அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.
40 நிமிட அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், சிதைந்த காலை அகற்றிய மருத்துவர்கள், தற்போது செயற்கைக் காலுடன் நடப்பதற்கு அந்தக் குதிரை பழகி வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அந்தக் குதிரை வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்பலாம் என்ற ஆறுதல் செய்தியையும் அறிவித்துள்ளனர்.