Home Featured நாடு அரசியல் பார்வை: பாஸ் புதிய கூட்டணி – தாக்கத்தை ஏற்படுத்துமா? சிலாங்கூர் அரசைக் கவிழ்ப்பது அடுத்த...

அரசியல் பார்வை: பாஸ் புதிய கூட்டணி – தாக்கத்தை ஏற்படுத்துமா? சிலாங்கூர் அரசைக் கவிழ்ப்பது அடுத்த திட்டமா?

923
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புதன்கிழமை (மார்ச் 16) நேற்று அறிவிக்கப்பட்ட பாஸ் கட்சி – இக்காத்தான் எனப்படும் பார்ட்டி இக்காத்தான் பங்சா மலேசியா – ஆகிய இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி எதிர்பார்க்கப்பட்டபடி மலேசிய அரசியல் அரங்கில் எந்தவித சலனத்தையும் – சலசலப்பையும் – ஏற்படுத்தவில்லை.

PAS-Ikatan-Hadi- Awang - Kadir Sheikhபாஸ் தலைவர் ஹாடி அவாங் – இக்காத்தான் தலைவர் காடிர் ஷேக் பாட்சிர் – கைகுலுக்கலில் ஏற்படுமா மாற்றங்கள்?

மாறாக, ஒரு கேலிக் கூத்தான கூட்டணியாகத்தான் இது பார்க்கப்படுகின்றது. காரணம் நேற்றைய அறிவிப்புவரை இக்காத்தான் என்ற பெயரில் ஒரு கட்சி இருப்பதே யாருக்கும் நினைவில் இல்லை. அந்தக் கட்சி இதுநாள் வரை நாட்டை உலுக்கி வந்த எத்தனையோ விவகாரங்களில் எந்த ஓர் அறிக்கையையும், கருத்தையும் தகவல் ஊடகங்களின் வழி பதிவு செய்ததும் இல்லை.

#TamilSchoolmychoice

அத்தகைய செல்வாக்கில்லாத ஒரு கட்சியுடன், வலுவான கட்சியாக – அம்னோவுக்கு சமமாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட பாஸ் இணைந்திருப்பதும் – அதனை ஓர் அரசியல் கூட்டணி என்று அறிவிப்பதும் – கேலிக் கூத்தாகத்தான் பார்க்கப்படுகின்றது.

ஆனால், அந்தக் கூட்டணி அறிவிப்பில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் – இனி பாஸ் கட்சி, பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியிலோ, பக்காத்தான் ராயாட் கூட்டணியிலோ இல்லை என்பதுதான்!

இதுவரை பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் இயங்கி வந்த பாஸ்-பிகேஆர் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி இனி செயல்படாது என்பதுதான் இந்தக் கூட்டணி இணைப்பின் மூலம் பாஸ் விடுத்திருக்கும் முக்கியமான செய்தியாகும்.

இக்காத்தான் பலம் என்ன?

Tengku-Razaleighசில மாதங்களுக்கு முன்னால் இக்காத்தான் கட்சி கட்சி தொடங்கப்பட்டபோது அதன் பின்னணியில் அம்னோவின் மூத்த தலைவரும், கிளந்தான் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான  துங்கு ரசாலி (படம்) இருக்கின்றார் எனப் பரவலாகக் கருதப்பட்டது.

காரணம், இக்காத்தான் கட்சியின் தலைவராகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த டான்ஸ்ரீ அப்துல் காடிர் ஷேக் பாட்சிர், துங்கு ரசாலி ஹம்சாவுக்கு நெருக்கமான அரசியல் சகாவாகக் கருதப்பட்டவர். அதனால், அவர் முதலில் அம்னோவிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத்தோற்றுவித்து வைத்திருக்கின்றார் என்றும் அம்னோவில் பிளவு ஏற்பட்டால் துங்கு ரசாலி தலைமையில் ஒரு குழுவினர் அம்னோவிலிருந்து பிரிந்து இந்த இக்காத்தான் கட்சியில் சேருவர் என்றும் கடந்த ஆண்டில் ஆரூடங்கள் எழுந்தன.

ஆனால், துங்கு ரசாலி இன்னும் அம்னோவில் தொடர்ந்து கொண்டிருப்பதால், இக்காத்தான் கட்சி முற்றாக மலேசிய அரசியல் அரங்கிலிருந்து மறக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில்தான், திடீரென உயிர்கொண்டு மீண்டும் எழுந்துள்ள இக்காத்தான் கட்சியோடு பாஸ் கட்சி கூட்டணி உறவைத் தோற்றுவித்துள்ளது.

ஆங்கில உடை மோகம் கொண்ட காடிர் ஷேக் பாட்சிர்

Abdul -Kadir - Sheikh - Fadzir -Tan Sriஒரு காலத்தில் அம்னோவில் சுற்றுலாத்துறை அமைச்சராக வலம் வந்தவர் காடிர் ஷேக் பாட்சிர் (படம்). ஆங்கில பாணியில் உடை அணியும் மோகம் கொண்ட இவர், அமைச்சராக இருந்த காலத்திலும் சரி – இப்போதும் சரி – ஆங்கிலேய பாணியில் “போ டை” (Bow Tie) அணியும் வழக்கம் கொண்டவர். அதனாலேயே, தனக்கென ஒரு தனித்துவ தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.

கெடாவை பூர்வீகமாகக் கொண்டவர் இவர். இருந்தாலும், மலாய் மக்களிடத்திலோ, கெடா மாநிலத்திலோ அதிகம் செல்வாக்கில்லாதவர். அவர் யாரென்றே இன்றைய இளைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும், அவரது சொந்த இளைய சகோதரரே (அப்துல் அசிஸ் ஷேக் பட்சீர்) இன்னும் அம்னோவில் தீவிரமாக இயங்கி வருகின்றார். எனவே, இவரது இக்காத்தான் கட்சி பெயருக்களவுக்கான கட்சியே தவிர, பாஸ் கட்சியுடன் இணைந்திருப்பதால் எந்தவிதத்திலும் மலேசிய அரசியல் அரங்கில் காட்சிகள் மாறப் போவதில்லை.

சிலாங்கூர் பக்காத்தான் கூட்டணி அரசாங்கம் கவிழுமா?

ஆனால், இப்போதைக்கு பாஸ் கட்சி சிலாங்கூர் மாநிலத்தில் பிகேஆர் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுமா அல்லது தனித்து இயங்குமா என்பதுதான் புதன்கிழமை நிகழ்ந்த கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து எழுந்துள்ள மற்றொரு சுவாசியமான கேள்வியாகும்.

Azmin Aliஇனி பக்காத்தான் கூட்டணியில் இல்லை என்பதால், பாஸ் கட்சி பிகேஆர் கட்சிக்கு சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை வழங்கி வந்துள்ள ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமா அல்லது பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் (படம்) தலைமையின் கீழ் இயங்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருமா என்பதுதான் கேள்விக் குறி.

அவ்வாறு பாஸ் கட்சி பிகேஆர் கட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால், பாஸ் கட்சியும், அம்னோவும் இணைந்து சிலாங்கூரில் புதிய ஆட்சி ஏற்படுத்த முடியுமா என்பது அடுத்து இயல்பாகவே எழும் கேள்வி!

அல்லது ஜசெகவும் பிகேஆர் கட்சியும் மட்டும் இணைந்து, பாஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அமானா கட்சியினரின் ஆதரவோடு, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பிகேஆர் கட்சியால் தொடர்ந்து நடத்த முடியுமா?

என்பது போன்ற கேள்விகளும் தொடர்ந்து எழுகின்றன.

சிலாங்கூரில் அம்னோ, பாஸ் கட்சியுடன் இணைந்து, ஆட்சி அமைக்க வேண்டுமானால், பாஸ் அல்லது பிகேஆர் கட்சியிலிருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களை அது தன் பக்கம் இழுக்க வேண்டும் – பேராக்கில் செய்ததைப் போன்று!

நாட்டில் நஜிப்புக்கு எதிராகப் பெருகி வரும் எதிர்ப்பு அலைகளைச் சமாளிக்கவும் – திசை திருப்பவும் சிலாங்கூரில் பாஸ் கட்சியுடன் இணைந்து நடப்பு ஆட்சியைக் கவிழ்த்து – புதிய ஆட்சியை நிர்மாணிக்க அம்னோவும்-நஜிப்பும் முயற்சி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-இரா.முத்தரசன்