46 வயதைக் கடந்து விட்டாலும், உடற்கட்டைப் பேணுவதிலும், நேற்று வந்த இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சிகரமாக உடை உடுத்தி, நிகழ்ச்சிகளில் உலா வருவதிலும் முன்னணி வகிப்பவர் ஜெனிப்பர்.
ஆஸ்கார் விருதளிப்பு நிகழ்ச்சிகளில் கடந்த காலங்களில் இவர் அணிந்து வந்த ஆடைகள் பிரபலம் என்பதோடு, இன்றும் இணையத் தளங்களில் அதிகமாகப் பேசப்படும் – பார்க்கப்படும் ஆடைகளாக அவை திகழ்கின்றன.
அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘அமெரிக்கன் ஐடல்’ (American Idol) நிகழ்ச்சியின் போதும் அசத்தலான கவர்ச்சித் தோற்றத்தில் வந்து தொலைக்காட்சி இரசிகர்களை கிறங்கடித்தார் லோப்பஸ். இந்த பாடல் நிகழ்ச்சிக்கான நீதிபதிகளில் ஒருவர் லோப்பஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை எண்ணற்ற காதலர்கள் – அதிகாரபூர்வமாக மூன்று கணவர்கள் என்பதுதான் லோப்பசின் இன்று வரையிலான கணக்கு. தனது மூன்றாவது கணவர் மார்க் அந்தோணிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் அவருக்கு உண்டு.
சரி செய்திக்கு வருவோம் அடுத்ததாக அவர் நான்காவதாக திருமணம் புரியப் போவதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தற்போது அவரது காதலராகப் பொது இடங்களில் லோப்பசுடன் கைகோர்த்து உலா வருபவர் நடன அமைப்பாளரான கேஸ்பர் ஸ்மார்ட். இவரைத்தான் லோப்பஸ் திருமணம் செய்யப் போவதாக ஆரூடங்கள் வரத் தொடங்கியுள்ளன.
கேஸ்பருக்கு வயது வெறும் 28தான் (ஒரு சிலருக்கு காதில் புகை வரலாம்). இருப்பினும், நடனத்தாலும், தோற்றத்தாலும், பழக்கத்தாலும் லோப்பசை வெகுவாகக் கவர்ந்து விட்டாராம் கேஸ்பர்.
இருப்பினும் தற்போதைக்கு கேஸ்பரை நான்காவதாக திருமணம் புரிவது குறித்து சிந்திக்கவில்லை என்று அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருக்கின்றார் லோப்பஸ்.
எனவே, இப்போதைக்கு ஹாலிவுட் தகவல் ஊடகங்களுக்கு தீனியாகக் கிடைத்திருப்பது, லோப்பஸ், கேஸ்பரைத் திருமணம் செய்வாரா அல்லது காதலர்களாகவே அவர்கள் சுற்றி வருவார்களா என்ற ஆரூடங்கள்தான்!
-செல்லியல் தொகுப்பு