Home Featured கலையுலகம் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் தொடர்கின்றது – அவரது பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை!

கலாபவன் மணி மரணத்தில் மர்மம் தொடர்கின்றது – அவரது பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை!

922
0
SHARE
Ad

சாலக்குடி – பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் இன்னும் விசாரணைகளும், ஆரூடங்களுமாக மர்மம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்கிடையில் அவரது பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, அங்கு அவர்கள் சில முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படும் சில ரசாயனங்களை கைப்பற்றியுள்ளனர்.

Kalabhavan-maniஉடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கலாபவன் மணி (வயது 45), கேரளாவில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 6-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு மர்மங்களும் சந்தேகங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

போலீசாரும் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அவரது உடல் உள்ளுறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவரது உடலில் ’குளோர்பைரிபோஸ்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

கலாபவன் மணியின் மரணத்தில் அவரது நண்பர்கள், உதவியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அவரது மனைவி நிம்மி, சகோதரர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தேகங்களை எழுப்பியுள்ளதைத் தொடர்ந்து சந்தேக மரணம் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், மணிக்கு அவரது நண்பர்கள் மதுவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்று கருதி சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கொலை வழக்காக மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்.

கேரளாவின் திருச்சூர் பகுதியில் உள்ள சாலக்குடி என்ற இடத்தில் உள்ள கலாபவன் மணியின் பண்ணை வீட்டில் கலாபவன் மணியுடன் இருந்தவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில்தான், சாலக்குடியில் உள்ள கலாபவன் மணியின் பண்ணை வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆதாரங்களாக சில ரசாயனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.