சென்னை – கலால் வரி விதிப்பை திரும்ப பெற கோரி தங்க நகை வியாபாரிகள் கடந்த 18 நாட்களாக நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. தங்க நகைகளுக்கு 1 சதவீதம் கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி முதல் கடையடைப்பு நடத்தினர்.
நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நகை கடைகளும், தமிழகத்தில் 35,000, சென்னையில் 7,000 நகைக்கடைகளும் போராட்டத்தில் பங்கேற்றன. கடந்த 17ஆம் தேதி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நகை வியாபாரிகளின் பேரணி நடந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘கலால் வரி விதிப்பில் சில பிரச்சினைகளை நீக்கி தொழில் செய்வோருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கலால் வரிவிதிப்பு பிரச்சினைகளை ஆராய 10 பேர் குழுவை அமைத்துள்ளது. இதில் கலால் வரித்துறையை சேர்ந்த 5 பேரும், நகை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். இக்குழு 2 மாதத்துக்குள் அறிக்கை தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து காலவரையற்ற போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளோம். தமிழகம் உள்பட, இந்தியா முழுவதும் தங்கநகைகடைகள் இனி வழக்கம் போல் செயல்படும். 18 நாட்கள் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் இந்தியா முழுவதும் ரூபாய் 80 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது’’ என்றார்.