Home வணிகம்/தொழில் நுட்பம் வணிகப் பார்வை: கோலாலம்பூரை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நகை மாளிகைகள்!

வணிகப் பார்வை: கோலாலம்பூரை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நகை மாளிகைகள்!

1465
0
SHARE
Ad

Indian_Jewellery_Retail_Displayகோலாலம்பூர் – கோலாலம்பூரின் பரபரப்பான, மிகப் பெரிய இந்திய வணிக வளாகமாகக் கருதப்படும் மஸ்ஜிட் இந்தியா வட்டாரம் கடந்த சில ஆண்டுகளாக, ஒரு குறிப்பிடத்தக்க தோற்ற மாற்றத்தைக் கண்டு வருகின்றது.

வரிசையாக முளைத்துவரும் இந்திய அளவில் புகழ்பெற்ற  மிகப் பெரிய நகை விற்பனை மாளிகைகள்தான் அந்த மாற்றத்திற்குக் காரணம்.

மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக அவர்கள் நாடிச் செல்லும் வணிக வளாகமாக இருந்து வந்தது ‘பத்து ரோட்’ என்று அழைக்கப்படும் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலைதான். 1980ஆம் ஆண்டுகளில் இங்குதான் குளோப் சில்க் ஸ்டோர், மக்கன்லால், வீகேகே கல்யாணசுந்தரம் போன்ற இந்திய ஜவுளி நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

#TamilSchoolmychoice

மஸ்ஜிட் இந்தியா வளாகத்தின் வளர்ச்சி

masjid-india-mosqueஆனால், 1980-ஆம் ஆண்டு காலகட்டங்களில் துவாங்கு அப்துல் ரஹ்மான்  சாலைக்கு அடுத்துப் பின்னால் இருந்த மஸ்ஜிட் இந்தியா பகுதி தூங்கி வழிந்து கொண்டு இருந்தது. கைலி எனப்படும் லுங்கிக் கடைகளும், மற்ற சிறிய அளவிலான இந்தியர்களுக்கான விற்பனை மையங்களும், சில நாணயமாற்று வியாபாரங்களும் மட்டும் அங்கு அமைந்திருந்தன.

1980-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மஸ்ஜிட் இந்தியாவின் ஒரே அடையாளம் – அந்தப் பெயர் வந்ததுக்கான காரணம் – அங்கிருந்த இந்திய முஸ்லீம்களுக்கான பள்ளிவாசலாகும்.

1980-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கோலாலம்பூர் சாலைகளில் கார்களின் எண்ணிக்கை உயர்ந்த காரணத்தால், துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் வாகன நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கின. அங்கு முறையான கார் நிறுத்தும் வசதிகள் இல்லாமல் போனதும் அந்தப் பகுதிக்கு ஒரு பின்னடைவாகிப் போனது.

GRT-masjid india-KL-இதனால், மெல்ல, மெல்ல இந்திய வணிகர்களும், ஜவுளி நிறுவனங்களும், மஸ்ஜிட் இந்தியா பகுதிக்குள் தங்களின் வணிகங்களை அமைக்கத் தொடங்கினர். குறைந்த வாடகை, வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடிய வசதிகள், போன்ற காரணங்களால் வணிகர்களை ஈர்த்த மஸ்ஜித் இந்தியா பகுதிக்குள் நாளடைவில் பொதுமக்களும் பெருமளவில் குவியத் தொடங்க இன்று தலைநகரின் அதிகமான விற்பனைகளைக் காணும் முக்கிய வணிக வளாகமாக மாறிவிட்டது அந்தப் பகுதி.

இன்று கோலாலம்பூரின் மிக அதிகமான வாடகை கொண்ட கடைகள் உள்ள பகுதிகளுள் ஒன்று என்றால் அது மஸ்ஜித் இந்தியா பகுதிதான்.

இந்தியர்களுக்கான நகைக்கடைகள்

Joy Alukkas-jalan-masjid-indiaஇந்தியர்கள் கூடும் பகுதி என்பதால், வழக்கம்போலவே, இந்தியர்களுக்கான நகைக்கடைகளும் மஸ்ஜித் இந்தியா பகுதியில் நிறையத் திறக்கப்பட்டன. இவை முழுக்க முழுக்க உள்ளூர் நகை வியாபாரிகளால் திறக்கப்பட்ட நகைக் கடைகளாகும்.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மற்றொரு வணிக மாற்றமாக இந்தியாவில் இருக்கும் பல புகழ்பெற்ற நகை மாளிகைகள் கோலாலம்பூரை நோக்கி – குறிப்பாக மஸ்ஜித் இந்தியா பகுதிக்குள் – வரத் தொடங்கின.

இன்றைய தேதியில் ஜோய்அலுக்காஸ், மலபார் நிறுவனம், ஜிஆர்டி தங்க மாளிகை போன்றவை மிகப் பெரிய விற்பனை மையங்களை மஸ்ஜிட் இந்தியா பகுதியில் திறந்துள்ளன.

அதிலும் ஜோய்அலுக்காஸ் குறுகிய காலத்திலேயே இந்தப் பகுதியில் இரண்டு கடைகளைத் திறந்திருக்கின்றது. அதன் இரண்டாவது கடை லூலூ சூப்பர் மார்க்கெட் என்ற பல்பொருள் அங்காடி மையத்தில் திறக்கப்பட்டிருக்கின்றது.

இந்திய நகை நிறுவனங்கள் வருகை ஏன்?

malabar-jewellery-shop-masjid indiaஉலக அளவில் தங்களின் வணிகங்களை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்திய நகை நிறுவனங்கள், தங்களின் சந்தையின் முக்கியக் களமாக கோலாலம்பூரைப் பார்க்கின்றன.

ஏற்கனவே, இலட்சக்கணக்கான இந்திய வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் சந்தை என்ற சாதகம் ஒரு புறம் இருக்க, இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் அதிகரித்துக் கொண்டே போவதால், மலேசியா ஒரு முக்கியமான சந்தையாக இந்திய நகை விற்பனை நிறுவனங்களால் குறி வைக்கப்படுகின்றன. இந்தியாவில் நன்கு அறிமுகமான வணிக முத்திரை கொண்ட நகை விற்பனை மையங்களை நாடி இந்தியாவின் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதும் அவர்களின் இலக்குகளில் ஒன்றாகும்.

chennai-gold-jewellery-shopsதங்க நகைகளை வாங்கக் கூடிய அதிகமான வங்காள தேச தொழிலாளர்களையும் கொண்டிருப்பதால் மலேசியாவில் தங்க நகை வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது.

இன்றைய நிலையில், ஜோய் அலுக்காஸ், மலபார், ஜிஆர்டி ஆகிய நிறுவனங்கள் கோலாலம்பூரின் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்க, மற்றொரு இந்திய நகை விற்பனை நிறுவனமான “போபி & மரடோனா கோல்ட் டைமண்ட் ஜூவல்லரி” (Boby & Maradona Gold Diamond Jewellery) என்ற நிறுவனம் பிரிக்பீல்ட்சில் உள்ள நியூ சென்ட்ரல் வணிக அங்காடியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் சில இந்திய நகை விற்பனை நிறுவனங்கள் கோலாலம்பூரில் கால் பதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூர் நகை வணிகங்களுக்கு, இந்திய நிறுவனங்களால் எவ்வளவு தூரம் பாதிப்பு என்பது இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், கால ஓட்டத்தில், இதே நிலைமை தொடர்ந்தால், உள்ளூர் நகை விற்பனை சந்தையின் கணிசமான விகிதாச்சாரம் இந்திய நகை நிறுவனங்களின் கரங்களுக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்