சென்னை – விவசாயிகளின் தற்கொலைகள், அவர்களின் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சியில் நடிகர் விஷால் இறங்கியுள்ளார். உண்மையிலேயே கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு அவர் பண உதவி செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் விவசாயி பாலன் என்பவர் டிராக்டர் கடன் அடைக்காதக் காரணத்தால் போலீசாரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
விவசாயி பாலனுக்கு நடிகர் விஷால் உதவி செய்வதாக கூறியதோடு, அவரது கடனை தீர்ப்பதாக அறிவித்தார். சில தினங்களிலேயே கடன் பிரச்சினையால் மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
‘கடன் பிரச்சினையால் மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். நண்பர்களே இதற்கு முடிவு கட்ட வேண்டும். இதற்காக தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கவிருக்கிறேன்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்திருந்தார்.
தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளரிடம் பேசிய விஷால், ‘துபாயில் இருந்து நண்பர் ஒருவர் 1.லட்சம் ரூபாய் அனுப்பி இருக்கிறார். டெல்டா விவசாயிகளின் பிரச்சினை என்னவெல்லாம் இருக்கிறது என்று விசாரிக்க சொல்லியிருக்கிறேன்.
முழுமையாக விசாரித்து விவசாயிகளின் பிரச்சினைகள் என்னவென்று அலசி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பணம் கொடுத்து உதவ இருக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது நிறைய உதவிகள் கேட்டு வருகிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக பணம் கொடுத்துவிடாமல் முழுக்க விசாரித்து மட்டுமே கொடுக்க இருக்கிறேன்.
உண்மையில் வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு உதவி செய்துவிட்டு, பணம் அனுப்பிய நண்பர்களுக்கு இவருக்கு உதவி செய்திருக்கிறேன் என்று கூற திட்டமிட்டு இருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி நதிநீர் பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்று விஷால் கூறியதற்கு, டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை வெளியிட விடமாட்டோம் என்றும் கூறினர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு உதவி செய்து அவர்களின் கோபத்தை போக்கியுள்ளார் விஷால்.