கோலாலம்பூர் – புதிதாக துவங்கப்பட்ட ரயானி ஏர் நிறுவனத்திற்கு எதிராக மேலும் புகார்கள் எழுந்தால், போக்குவரத்து அமைச்சு அதன் சேவையை தற்காலிகமாக நிறுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயானி ஏர் நிறுவனத்தை கவனமாகக் கண்காணித்து வருகின்றோம். மேலும் பிரச்சனைகள் அதிகரித்தால், நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்”
“எங்களின் கட்டளைகளை அவர்கள் பின்பற்றவில்லை என்றால் அதன் சேவையைத் தற்காலிக நிறுத்தம் கூட செய்ய முடியும். எங்களுக்கு புகார்கள் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்று லியாவ் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி விமானங்களின் சேவையை கடைசி நேரத்தில் நிறுத்துவது, பயணிகளுக்கு மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யாமல் இருப்பது உள்ளிட்ட புகார்கள் ரயானிக்கு எதிராக எழுவதாகவும், அது குறித்து போக்குவரத்து அமைச்சு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு தெரிவித்துவிட்டதாகவும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், விமான நுழைவுச்சீட்டுகளைக் (Boarding Passes) கையில் எழுதி வழங்குவதாகவும் அந்நிறுவனம் மீது புகார்கள் எழுந்துள்ள என்று குறிப்பிட்டுள்ள லியாவ், அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.