புதுடெல்லி – இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்வோரிடம் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் இருப்பதாக இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உலக அளவில் கருப்பு பணம் குறித்து இத்தாலி வங்கி ஆய்வு நடத்தியது. பொருளாதார நிபுணர்கள் நடத்திய இந்த ஆய்வில், இந்தியாவில் மட்டும் 15,200 கோடி டாலர் முதல் 18,100 கோடி டாலர் வரையிலான கருப்பு பணம் வரி ஏய்ப்பாளர்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக நிதியம் மற்றும் அனைத்துலக தீர்வுகளுக்கான வங்கி ஆவணங்களில் உள்ள 2013-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருப்பு பணத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10.18 லட்சம் கோடி முதல் ரூ.12.12 லட்சம் கோடியாகும்.
வரி சொர்க்கமாக திகழும் நாடுகளில் சுமார் 6 லட்சம் கோடி டாலர் முதல் 7 லட்சம் கோடி டாலர் வரையிலான பணம் கருப்பு பணமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை கண்டுபிடிக்கும் அளவுக்கு அல்லது, வரி ஏய்ப்பை தடுக்கும் அளவுக்கு போதுமான வலுவான விதிமுறைகள் இல்லை.
அதோடு, இரகசியம் காக்கும் சட்டங்கள் கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு சாதகமாக உள்ளன. இதை பயன்படுத்தி நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் தங்களின் உண்மையான சொத்து அல்லது வருவாய் விவரங்களை தெரிவிக்காமல் மறைத்து விடுகின்றனர்.
பங்கு முதலீடு, கடன் பத்திரங்கள் அல்லது வங்கி முதலீடாகவும் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2013-ஆம் ஆண்டில் உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியர்களின் பங்களிப்பு எவ்வளவோ அந்த அளவு வரி ஏய்ப்பும் நடத்திருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.