கோலாலம்பூர் – விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் 5 வெற்றியாளராளர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஏற்கனவே பல படங்களில் பாடிய பின்னணிப் பாடகர் என்பதை ஒப்புக் கொண்ட விஜய் டிவி, பின்னணிப் பாடகர்கள் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று பதிலளித்துள்ளது.
இது குறித்து த நியூஸ் மினிட் (The News Minute) என்ற இணையதளத்திற்கு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தலைவர் பிரதீப் மில்ரோய் பீட்டர் அளித்துள்ள தகவலில், “எங்களுடைய போட்டி விதிமுறைகளில், எங்குமே திரைப்படங்களில் இடம்பெற்றவர்களோ அல்லது பின்னணிப் பாடகர்களோ போட்டியில் பங்குபெற முடியாது என்று குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆனந்த் ஒரு பின்னணிப் பாடகர் என்பதில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லை என்று கூறியிருக்கும் விஜய் தொலைக்காட்சி, முதல் நேர்காணலின் போது ஆனந்த் இதைத் தங்களிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளது.
“தான் பின்னணி பாடியிருப்பதை அவர் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் தான் அவ்வளவு பிரபலம் இல்லை என்பதால் தான் போட்டியில் கலந்து கொள்ள வந்ததாகவும், இந்தப் போட்டியில் பங்கேற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் அறிமுகமாகலாம் என்றும் அவர் கூறினார்” என்று பிரதீப் கூறியுள்ளார்.
“இந்தச் செய்தியைப் பரப்பியவர்கள் நிச்சயமாக முழு நிகழ்ச்சியையும் பார்த்திருக்கமாட்டார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து வந்தவர்களுக்குத் தெரியும் அவர் இதற்கு முன்பு பின்னணி பாடியிருக்கிறார் என்று. நாங்கள் எதையும் மறைக்கவில்லை” என்றும் பிரதீப் கூறியுள்ளார்.
மேலும், நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு பின்னணிப் பாடகர்கள் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறை இருந்ததாகவும், ஆனால் சூப்பர் சிங்கர் 3-லேயே அந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதாகவும் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு பின்னணிப் பாடகரே எங்களது போட்டியில் வந்து கலந்து கொள்கிறார் என்றால், அதை நாங்கள் பெருமையாக நினைக்கமாட்டோமா?” என்றும் பிரதீப் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனந்த் வெற்றிபெற்றதாக அறிவித்த அந்த நேரத்தில், மேடைக்கு வந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், என்னுடைய அடுத்த படத்தில் ஆனந்த் பாடுகிறார் என்றவுடன், ஆனந்த் தனது முகத்தில் காட்டினாரே ஒரு சந்தோஷம்! அடடா!
“சொல்லுங்க ஆனந்த்.. சந்தோஷ் நாராயண் சார் இசையிலேயே பாடப் போறீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?” என்று என்னமோ எங்கோ ஒரு கிராமத்தில் ஆர்கெஸ்ட்ராவில் பாடிக் கொண்டிருந்தவருக்கு சந்தோஷ் நாராயணன் இசையில் பாட வாய்ப்பு வாங்கித் தந்தது போல் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மாறி மாறி ஆனந்திடம் கேள்வி கேட்டு அந்தச் சூழலை மேலும் பரவசப்படுத்தியது இன்னும் கண்முன்னேயே இருக்கிறது.
டி.இமான் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்களைப் பாடி விட்டவருக்கு சந்தோஷ் நாராயணை அணுகுவது என்ன எட்டாக் கனியா?
தொகுப்பு: செல்லியல்