Home One Line P2 பிக் பாஸ் 4 : இறுதிச் சுற்று : நடிகர் ஆரி முதலாவது...

பிக் பாஸ் 4 : இறுதிச் சுற்று : நடிகர் ஆரி முதலாவது வெற்றியாளர்

807
0
SHARE
Ad

சென்னை : தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் “பிக்பாஸ்” தொடரில் இறுதிச் சுற்றில் நடிகர் ஆரி முதலாவதாக வெற்றி பெற்றார்.

இரண்டாவது நிலையில் பாலாஜி வெற்றி பெற்றார்.

ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜனவரி 17ஆம் தேதி) பிக்பாஸ் 4 நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

#TamilSchoolmychoice

சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்குத் தேர்வான ஆறு பேர்களில் ஒருவரான கேப்பிரியல்லா  10 இலட்ச ரூபாய் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து இறுதிச் சுற்றில் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். சோம் சேகர், ரியோ, பாலாஜி, ஆரி, ரம்யா பாண்டியன் ஆகியோரே அந்த ஐவராவர்.

அவர்களில் இருந்து ஒருவர் ஒருவராக இறுதிச் சுற்றில் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதன்படி சோம் சேகர் முதலில் வெளியேறுவதாக இன்றைய இறுதி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார். அவரை பிக்பாஸ் இல்லத்தின் உள்ளே சென்று கடந்த ஆண்டு வெற்றியாளர் மலேசியர் முகேன் ராவ் வெளியே அழைத்து வந்தார்.

அடுத்ததாக, இன்னொருவரை வெளியேற்ற வேண்டுமென கடந்த ஆண்டு பங்கேற்பாளரான கவினை கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அவரும் பிக்பாஸ் இல்லம் உள்ளே செல்ல அங்கிருக்கும்போது ரம்யா பாண்டியனை வெளியேற அழைத்து வருமாறு கவினை பிக் பாஸ் பணித்தார்.

கவினும் ரம்யா பாண்டியனை அழைத்துக் கொண்டு பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினார்.

ஆக முதல் மூன்று நிலைகளில் வெற்றி பெறுவதற்கான தகுதியோடு ஆரி, ரியோ, பாலாஜி ஆகிய மூவர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

அடுத்த கட்டமாக கடந்த ஆண்டு பிக்பாஸ் போட்டியாளர் ஷெரின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டினுள் அனுப்பி வைக்கப்பட்டார். உள்ளே சென்ற அவர் ரியோவை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தார்.

இதைத் தொடர்ந்து எஞ்சிய போட்டியாளர்களான ஆரி, பாலாஜி இருவரில் ஒருவர்தான் வெற்றியாளர் ஆவார் என்பது உறுதியானது.

தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தி வந்த கமல்ஹாசன் பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்தார். அங்கு அவர் எஞ்சியிருந்த 2 போட்டியாளர்களான ஆரி, பாலாஜி இருவருடனும் கலந்துரையாடினார். பிக் பாஸ் இல்லத்தைச் சுற்றிப் பார்த்தார்.

அங்கிருந்த செடிகள் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என பிக்பாசிடம் வேண்டுகோள் விடுத்த கமல், அடுத்த பருவத்தில் (சீசனில்) அந்தச் செடிகள் வளர்ந்து நிற்பதைக் காணவிரும்புவதாகத் தெரிவித்தார்.

பின்னர் ஆரி, பாலாஜி இருவரையும் அழைத்துக் கொண்டு பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியே வந்தார். மேடையில் ஆரி, பாலாஜி நிற்கவைத்து நடுவில் நின்று கொண்ட கமல் ஆரியை வெற்றியாளராக அறிவித்தார்.

வெற்றியாளரான ஆரிக்கு 16 கோடிக்கு மேல் வாக்குகள் கிடைத்ததாகவும், இரண்டாவது நிலை வெற்றியாளரான பாலாஜிக்கு 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்ததாகவும் கமல் அறிவித்தார்.