கோலாலம்பூர் – முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போது சிறைவாசம் புரிந்து வருபவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், செனட்டரும் தனது முன்னாள் நண்பருமான டத்தோ எஸ்.நல்லகருப்பனுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை மீட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கின் மூலம் 100 மில்லியன் ரிங்கிட் அன்வார் நஷ்ட ஈடு கேட்டிருந்தார். இந்த வழக்கில் தானே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரான அன்வார், மலேசிய ஒற்றுமை இந்தியர் கட்சித் தலைவருமான நல்லா, 8 வருடங்களுக்கு முன்னால் சர்ச்சைக்குரிய அவதூறு வாசகங்களைக் கூறவில்லை என்றும், பத்திரிக்கைகள்தான் அவ்வாறு திரித்து எழுதின என்றும் கூறியதைத் தொடர்ந்து, இந்த வழக்கை மீட்டுக் (வாபஸ்) கொண்டார்.
முன்னாள் போலீஸ் அதிகாரியும் முன்னாள் போலீஸ் ஐஜிபியுமான மூசா ஹாசான் சமர்ப்பித்திருந்த சத்தியப் பிரமாணத்தில் “அன்வார் ஒரு துரோகி” என்று கூறியிருந்த வாசகத்திலும் உண்மையில்லை என நேற்றைய வழக்கில் நல்லா தனது சாட்சியத்தின்போது மறுத்திருந்தது குறித்தும் அன்வார் தான் மகிழ்ச்சி அடைவதாக அன்வார் குறிப்பிட்டார்.
நேற்றைய வழக்கில் சாட்சியமளித்த நல்லகருப்பன், தான் இயக்குநராக இருந்த மேக்னம் என்ற சூதாட்ட நிறுவனத்திலிருந்து 6 மில்லியன் ரிங்கிட்டை அன்வார் பெற்றுத் தந்ததாகக் கூறவில்லை என்றும், பத்திரிக்கைகள்தான் அவ்வாறு திரித்து எழுதின எனத் தெரிவித்திருந்தார்.
அன்வார் ஒரு வெளிநாட்டின் கையாள் என்றும் தான் கூறவில்லை என நல்லா நேற்றைய சாட்சியத்தில் மறுத்தார். 8 ஆண்டுகளுக்கு முன்னால் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்களின்போது நல்லா இந்த கூற்றுகளைக் கோரியிருந்தார் என்பதன் அடிப்படையில்தான் அன்வார் 100 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கோரி, அவதூறு வழக்கொன்றைத் தொடுத்திருந்தார்.
நல்லா தான் அப்படிக் கூறவில்லை எனக் கூறியிருப்பதைத் தொடர்ந்து தான் தொடுத்திருக்கும் வழக்கை மீட்டுக் கொள்வதாக அன்வார் நேற்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.