ரவாங் – மூன்றாண்டுகளாக நீடித்து வந்த வழக்கில் இருந்து தனது சட்ட ஆலோசகர் அமெரிக் சித்துவை வெளியேற்றிவிட்ட மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி செந்தமிழ்ச் செல்வி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் இன்னும் 7 பேர் மீது தொடுத்திருந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
நேற்று ரவாங்கிலுள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செந்தமிழ்ச் செல்வி இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“எந்தத் தரப்பினரின் வற்புறுத்தலோ, தூண்டுதலோ இன்றி நான் சுயமாக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்” என்று செந்தமிழ்ச் செல்வி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக நேற்று சட்ட ஆலோசகர் அமெரிக் சித்துவுன் அறிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையில் தாங்கள் நாட்டை விட்டு வெளியேற பிரதமர் நஜிப்பும், இன்னும் 7 பேரும் தான் காரணம் என்று கூறி செந்தமிழ்ச் செல்வியும், அவரது மூன்று குழந்தைகளும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை வாபஸ் பெறும் செந்தமிழ்ச் செல்வியின் முடிவு குறித்து அமெரிக் சித்து கூறுகையில், “2 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கேட்டு செய்யப்பட்ட வழக்கில் தற்போது வெறும் 21,000 ரிங்கிட்டை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெறுகின்றார். இது நியாயமே இல்லை என்றாலும் அது அவரது சொந்த முடிவு” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று செந்தமிழ்ச் செல்வியின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவியாக பாரிசான் ஆதரவு அமைப்பான மிண்டா ( Pertubuhan Minda dan Social Prihatin Malaysia) 21, 050 ரிங்கிட் நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது.