ஹவானா – இரண்டுநாள் அரசுமுறை பயணமாக கியூபா நாட்டுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து அர்ஜெண்டினா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தனது கியூபா பயணத்தின்போது அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு உள்ள சுமார் அரை நூற்றாண்டுகால பகைமையை ஒபாமா முடிவுக்கு கொண்டு வருவார் என்று அனைத்துலக அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில், இருநாட்டு தலைவர்கள் நேற்று அளித்த கூட்டு பேட்டியின்போது கியூபா அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ – ஒபாமா இடையே இறுக்கமான மனநிலையே காணப்பட்டது.
ஒபாமாவின் இந்த பயணம் பெரும்பாலும் முன்னேற்றம் இன்றியே முடிந்ததாக கருத வேண்டிய சூழலில், தலைநகர் ஹவானாவில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒபாமா, தனது வருகையின் மூலம் அமெரிக்கா-கியூபா இடையே நிலவிவரும் பகைமையை தீர்த்து கொள்ள முடியும் என நம்புவதாகவும், கியூபா மக்களுக்கு அதிகமாக அரசியல் மட்டும் ஊடக சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.