சென்னை – சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மு.க. அழகிரி நேற்று சந்தித்து பேசியது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த்-மக்கள் நலக் கூட்டணி இணைப்பால் தமிழகம் முழுக்க எழுந்துள்ள உற்சாகத்தையும், எழுச்சியையும் திசைதிருப்பும் வண்ணம் இந்த சந்திப்பு நடந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பதன் மூலம் மீண்டும் கட்சியை ஓரளவுக்காவது முன்னெடுத்துச் செல்ல முடியும் என கருணாநிதி நம்புகின்றார் என்பது நேற்றைய சந்திப்பின் மூலம் தெளிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், அவர்(அழகிரி) தனது தாயாரையும், தந்தையாரையும் சந்திக்க வந்ததாக நான் கேள்விப்பட்டேன். இதில் எந்த விதமான அரசியல் பிரச்சினையோ, கட்சி பிரச்சினையோ இல்லை. தேவையில்லாமல் நீங்கள்(செய்தியாளர்கள்) குழப்ப வேண்டாம் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.