Home Featured தமிழ் நாடு தமிழகப் பார்வை: சட்டமன்றத் தேர்தல் கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விஜயகாந்த்! முதலமைச்சராகி அடுத்த அதிர்ச்சி தருவாரா?

தமிழகப் பார்வை: சட்டமன்றத் தேர்தல் கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விஜயகாந்த்! முதலமைச்சராகி அடுத்த அதிர்ச்சி தருவாரா?

637
0
SHARE
Ad

சென்னை – நேற்று புதன்கிழமை பங்குனி உத்திரம்! உலகம் எங்கிலும் உள்ள முருகன் தலங்களிலும், தமிழகத்தின் முருகன் ஆலயங்களிலும், இந்தத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட, சென்னையின் முக்கிய அரசியல் மையங்களிலும் அதிரடியான சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

dmdk pwaநேற்று விஜயகாந்த்துக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் இடையிலான கூட்டணி என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்புகள் தொலைக்காட்சித் திரைகளையும், இணையத் தளங்களையும் அலங்கரித்துக் கொண்டிருந்த அதே கணங்களில், தட்டுத் தடுமாறி அதிமுகவும், திமுகவும், தங்களின் கௌரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது போல, ஆளுக்கு தலா ஒரு அதிரடி அரசியல் அறிவிப்பை வெளியிட்டனர்.

அதிமுகவின் ஸ்டண்ட் – “கூப்பிடு சரத்குமாரை”

#TamilSchoolmychoice

அதிமுகவின் ஸ்டண்ட் என்னவென்றால், “உடனே கூப்பிடு சரத்குமாரை” என்பதுதான்!

அவரும் இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பதுபோல அடுத்த கணமே போயஸ் கார்டனில் ஆஜராக, மீண்டும் அதிமுகவுடன் இணைந்தது, சரத்குமாரின் மக்கள் சமத்துவ கட்சி என்ற அறிவிப்புகள் வெளியாகின.

Jayalalitha-Sarathkumarசரத்குமாரின் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற எர்ணாவூர் நாராயணன் என்பவர் புதிதாகத் தோற்றுவித்த மக்கள் சமத்துவ கழகம் என்ற கட்சியின் போர்வையில், சில நாட்களுக்கு முன்னர்தான் ஏழு கட்சிகளுள் ஒன்றாக போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டுச் சென்றார். இனி அவர் நிலை என்னவென்பது அவருக்குத்தான் தெரியும். அவரை இனியும் போயஸ் கார்டன் ஞாபகம் வைத்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்!

விஜயகாந்த்-மக்கள் நலக் கூட்டணி இணைப்புக்கு இணையான பரபரப்பு செய்தியாக  சரத்குமார் இணைப்பு இருக்கட்டும் என்ற எண்ணத்தில் அதிமுக நேற்று எடுத்த அதிரடி முடிவு இது.

திமுகவின் எதிர் அறிவிப்பு – முஸ்லீக் லீக் கூட்டணி அறிவிப்பு

தனது பங்குக்கு எதிர் அறிவிப்பு ஏதாவது இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் திமுக எடுத்த முடிவு – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர்களை கோபாலபுரம் வரவழைத்து, அவர்களுக்கு கூட்டணியின் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக கருணாநிதி முன்னிலையில் அறிவித்ததுதான்.

dmkஆனால், சரத்குமாரின் மறு இணைப்பு எடுபட்ட அளவுக்கு, முஸ்லீம் லீக்-திமுக கூட்டணி எடுபடவில்லை என்றுதான் கூறவேண்டும்.

தமிழகமெங்கும் நன்கு அறிமுகமான நடிகர் – தென்னிந்திந்த நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் – தென்மாவட்டங்களில் நாடார் சமூகத்தின் கணிசமான ஆதரவைப் பெற்றவர் – போதாக் குறைக்கு தமிழகமெங்கும் நன்கு அறிமுகமான நடிகை ராதிகாவின் கணவர் – என ஒரு மாநில தேர்தல் களத்திற்குத் தேவைப்படும் பல முகங்களைக் கொண்ட சரத்குமார், மீண்டும் அதிமுகவில் இணைந்தது அதிமுகவுக்கு இன்றைய நிலையில் ஒரு பலம்தான் என்று கூற வேண்டும்.

கேப்டன் கூட்டணியாக மாறிய மக்கள் நலக் கூட்டணி

Vijayakanth-makkal nala kootaniஆனாலும், இந்த திமுக-அதிமுக அறிவிப்புகளுக்கு மத்தியிலும், சந்தேகமில்லாமல், இந்த ஆண்டில் நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களின் ஆட்டநாயகன் நான்தான் என்பதை ஆட்டம் முடியும் முன்பே நிரூபித்து விட்டார் கேப்டன் விஜயகாந்த்.

இத்தனை மாதங்களாக அத்தனை கட்சிகளையும் தன் கட்சி அலுவலக வாசலில் காத்திருக்க வைத்தது – ஏன் அலையவே விட்டது – தன்னைப் பற்றி வானளாவ புகழ வைத்தது – இவையெல்லாம் – விஜயகாந்தின் மதிப்பை ஏகத்துக்கும் எகிறவைத்ததோடு, தமிழக மக்களின் மொத்தப் பார்வையும் அவர் எந்தப் பக்கம் போவார் என்பதில்தான் பதிந்து இருந்தது.

ஆனால், இறுதியில் தமிழக மக்களின் இன்றைய ஒருமித்த எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் – அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் – அதிகமான எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தாத முடிவாகத்தான் விஜயகாந்தின் அறிவிப்பு பார்க்கப்படுகின்றது.

இனி அடுத்த கட்டமாக விஜயகாந்தின் கூட்டணி-பாண்டவர் கூட்டணியாக நாடு முழுக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும்போது, போட்டி அந்தக் கூட்டணிக்கும், அதிமுகவுக்கும் இடையில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகவும் பின்தங்கி விட்டது என்றுதான் கூற வேண்டும்!

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம். இந்த தேர்தல் ஆட்டத்தின் நாயகன் நான்தான் என்பதை தமிழகத்திற்கு எடுத்துக் காட்டிவிட்டு, தேர்தல் பரபரப்பை அடுத்த கட்டத்திற்கு – இன்னும் கூடுதல் உஷ்ணத்திற்குக் கொண்டு போயிருக்கின்றார் விஜயகாந்த்.

மாற்றம் நிகழுமா? முதலமைச்சராவாரா விஜயகாந்த்?

vijayaஇந்தியாவெங்கும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இளைய தலைமுறை வாக்காளர்களின் எண்ணமும் செயலும் சிந்தனையும் வேறு விதமாக இருக்கின்றது.

டில்லியில் பலம் வாய்ந்த பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் – பாஜக கட்சிகளை வீழ்த்தி வென்று காட்டிய அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்த ஆதரவு இதற்கு ஓர் உதாரணம்.

தமிழகத்திலும் புதிதாக ஒரு கோடி புதிய வாக்காளர்கள் – அதாவது இளைய தலைமுறையினர் இந்தத் தேர்தலில் இணைந்திருக்கின்றார்கள் – என்கின்றன புள்ளி விவரங்கள்.

இந்த புதிய வாக்காளர்களும், தற்போதைய வாக்காளர்களில் கணிசமான விகிதத்தினரும், திமுக-அதிமுக இரண்டுமே வேண்டாம் என முடிவெடுத்தால் அவர்களின் வாக்குகள் – வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போமே என விஜயகாந்த் கூட்டணிக்குத்தான் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்படி நடந்தால், மே 19ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்போது, விஜயகாந்த்தான் தமிழகத்தின் புதிய முதல்வர் என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-இரா.முத்தரசன்