ஏற்கெனவே 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இன்றுவரை அந்த வழக்கை நடத்தி வருகிறேன். ஆனால், வழக்கு தொடுத்தவர்கள், நீதிமன்றத்துக்கே வருவதில்லை. 10 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல, இலங்கையில் நடப்பது என்ன என பேசியதற்காக, என் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு வழக்கை திமுக தலைவர் கருணாநிதி தொடுத்தார். இதில் ஆயுள் தண்டனை அளிக்க முடியும். இந்த வழக்கு விசாரணையின்போதும் அவர்கள் வரவில்லை. இதில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டனர்.
நான் பேசியதை, ஒரு வார்த்தைக்கூட மாற்றிச்சொல்லப் போவதில்லை. ஆயுள் தண்டனை கிடைத்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். சொன்னதை திரும்பப் பெறும் பழக்கம் எனக்கு கிடையாது. இது அவருக்கு தெரிந்திருக்காது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி பலிகடா ஆக்கப்பட்டுவிட்டார்.
ஆனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடித்தவர்கள் திரைமறைவில் பதுங்கிக்கொண்டனர். சென்னையில் சாகித் பால்வா- மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது என்ன பரிமாற்றம் நடந்தது. கோடிக்கணக்கான ரூபாய் பணத்துக்கு ஒரு காசோலை (டி.டி.) கொடுக்கப்பட்டது என்கிறார்களே.
அது யாரிடம் கொடுக்கப்பட்டது. ஸ்டாலினுக்கும், சாகித் பால்வாவுக்கும் உள்ள உறவை சிபிஐயிடம் சொன்னதால்தானே பெரம்பலூர் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கினார். சாதிக்பாட்சா மரணத்தின் பின்ன ணியில் என்ன நடந்தது என்பதை சிபிஐ முறையாக விசாரிக்க வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
சாதிக்பாட்சாவின் மரணத்துக்கு திமுகவே காரணம் என நான் குற்றம்சாட்டுகிறேன். மேலும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். முடிந்தால் இதற்காகவும் என் மீது வழக்கு போடட்டும். சட்டப்படி பார்த்துக் கொள்கிறேன் என்றார் வைகோ.