வாஷிங்டன் – ஐ.எஸ் தீவிரவாதிகளை வீழ்த்துவதில் எங்களுக்கு ஆதரவாக முஸ்லிம்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க முஸ்லிம்கள் குறித்து, அதிபர் ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில்,
”ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதே அமெரிக்க ராணுவத்தின் முதல்பணி. நாங்கள் அதில் வெல்வோம். தீவிரவாதிகள் தோல்வியை தழுவுவார்கள். எங்களது பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் கைவிட வேண்டும் என தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம். தீவிரவாதத்தை வேரறுக்கும் வரையில் அமெரிக்கா ஓயாது”.
“மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்கப் போகிறவர்கள் அமெரிக்க முஸ்லிம்கள் தான். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் அதிகளவில் பங்காற்றியிருக்கிறார்கள்”.
“முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல் தற்காலிக தடை விதிக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். இது அமெரிக்காவின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுக்கு எதிரானதாகவும், அமெரிக்காவில் மதசுதந்திரம் உள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் பேச்சாகவும் உள்ளது” என்றார்.