கோலாலம்பூர் – அமினூல்ரஸ்யித் அம்சா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஜசெக பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவும், “இந்த குற்றவாளி (காலிட்) சொல்கிறார் 14 வயது சிறுவனின் காரில் ஆயுதங்கள் இருந்ததாம்” என்று தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக டோனி புவாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடந்துள்ள காலிட், “வேண்டுமென்றே பொதுமக்களை குழப்பும் வகையில் தூண்டுதலான கருத்துக்களைக் கூறும் இவரைப் பிடித்து விசாரணை செய்யுங்கள்” என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு, 14 வயது சிறுவன் அமினூல்ரஸ்யித் அம்சா மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு வழக்கில், தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலி அபு பக்கர் மீது ஷா ஆலம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக தான் பதவி விலகவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
அமினூல்ரஸ்யித்தின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,“எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று காலிட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
லாயர்ஸ் ஆஃப் லிபர்டி (Lawyers for Liberty’s) எரிக் பால்சென் என்பவர் காலிட் பதவி விலக வேண்டும் என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர் எனது முதலாளி அல்ல” என்று காலிட் பதிலளித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, காவல்துறை, அரசாங்கத்திற்கு எதிராக அமினூல்ரஸ்யித் குடும்பத்தினரின் வழக்கு விசாரணை ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், கடந்த 2010-ம் ஆண்டு, பொதுப்பணியில் முறையற்ற வகையில் நடந்து கொண்டு 14 வயது சிறுவனின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததாக, அந்த சமயத்தில் சிலாங்கூர் காவல்துறைத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அமினூல்ரஸ்யித் ஓட்டி வந்த காரில், ஆயுதங்கள் இருந்ததாகவும், அவர் காவல்துறையினரின் தடுப்புக்களை மீறி காரை வேகமாகச் செலுத்தியதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டிருந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்நிலையில், அமினூல்ரஸ்யித் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 100,000 ரிங்கிட் வழங்கவும் காலிட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில், அமினூல்ரஸ்யித்தின் குடும்பத்தினர் மொத்தமாக 414,800 ரிங்கிட் இழப்பீடாகப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.