சென்னை – இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்தும் அதை வாங்க உயிரோடு இல்லாத தனது மகன் கிஷோர் குறித்து அவரது தந்தை மிகவும் கவலை தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அவரைப் பயன்படுத்தி இன்று தேசிய விருதை வாங்கி விட்ட நடிகர் தனுஷ், இந்த ஒருவருடத்தில் ஒரு போன் கூட பண்ணவில்லை என்றும் மறைந்த படத்தொகுப்பாளர் கிஷோரின் தந்தை வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இது குறித்து அண்மையில் முன்னணி ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு வருடம் கடந்துவிட்டது என் மகன் இறந்து. ஆனால், சினிமாத் துறை எங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. என் மகன் தேசிய விருது பெற்றிருப்பதை வெற்றிமாறனின் துணை இயக்குநர் போன் செய்து எங்களுக்கு தெரிவித்தார். ஆடுகளம் உருவான வேளையில் தனுஷும், என் மகனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்”.
“இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால் இன்று வரை தனுஷிடமிருந்து எனக்கு ஒரு போன் அழைப்புக் கூட வரவில்லை. சிவகார்த்திகேயன் 2 லட்சம், சரத்குமார் ஒரு லட்சம் கொடுத்தார். ராகவா லாரன்ஸும், வெற்றிமாறனும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். இரண்டு படங்கள் வேலை செய்ததற்கு பிரகாஷ்ராஜ் 3 லட்சம் கொடுக்க வேண்டி உள்ளது இன்னும் தரவில்லை”.
“இந்த விருதை வைத்துக்கொண்டு என்ன செய்வது. என் மகன் விருதைத் தாண்டி எதுவும் பெறவில்லை. அவனது கடின உழைப்புக்கும், போரட்டத்துக்கும் இரண்டாவது விருதும் கிடைத்துள்ளது. அதைத் தாண்டி இந்த சினிமா என்ன கொடுத்துள்ளது ஒன்றுமில்லை. எங்கள் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூட ஆளில்லாமல் இருக்கிறோம்” என மகனை இழந்த 73 வயதான ஒரு அப்பாவாக நொந்து போயுள்ளார்.