மும்பை – 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது அரைஇறுதியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் வெஸ்ட் இண்டீசும், இந்தியாவும் களம் இறங்குகின்றன.
2007-ஆம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பிறகு எழுச்சி கண்ட இந்திய அணி, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரைஇறுதியை எட்டி இருக்கிறது.
இந்திய அணி அரைஇறுதிக்கு நுழைந்தது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் துணை கேப்டன் விராட் கோலி தான். அணியின் ஆணிவேராக விளங்கும் அவர் நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக 55 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 ரன்களும் விளாசி அணியை வெற்றிகரமாக கரை சேர்த்தார்.
இதுவரை 184 ரன்கள் சேர்த்துள்ள கோலியை தவிர்த்து இந்திய அணியில் வேறு யாரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது கவலைக்குரிய அம்சமாகும். இந்த ஆட்டத்திலும் இந்திய அணி கோலியின் பங்களிப்பைத்தான் பெரிதும் சார்ந்து இருக்கிறது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோரின் தொடர்ந்து சொதப்பலாக இருக்கிறது. முக்கியமான இந்த ஆட்டத்திலாவது இருவரும் பொறுப்பை உணர்ந்து, தேவைக்கு ஏற்ப ஆட வேண்டும். இதே நெருக்கடியில் சுரேஷ் ரெய்னாவும் தவிக்கிறார். அவரும் முழு திறமையை காட்ட வேண்டியது அவசியம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடது கணுக்காலில் காயமடைந்தார். காயத்துடன் அரைமணி நேரம் போராடிய யுவராஜ்சிங், எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டு இருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சம் கிடையாது. ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், டேரன் சேமி, வெய்ன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்செல் அதிரடி கட்டக்கூடியவர்கள்.
குறிப்பாக கெய்ல், சற்று நேரம் நிலைத்து நின்று விட்டாலும் ருத்ரதாண்டவமாடி விடுவார். இங்கிலாந்துக்கு எதிராக இதே மைதானத்தில் கெய்ல் 11 சிக்சருடன் 100 ரன்கள் குவித்தார்.
எனவே அவரை சீக்கிரம் அவுட் ஆக்கினால் தான் வெஸ்ட் இண்டீசை கட்டுப்படுத்த முடியும். இன்னும் 2 சிக்சர் அடித்தால், 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை வான்கடே மைதானம் ‘ரன்மழை’க்கு பெயர் பெற்றது. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் களத்தில் எந்த அணி நெருக்கடியை திறம்பட கையாள்கிறதோ அவர்களின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம்.