சென்னை – நட்சத்திரக் கிரிக்கெட் குறித்து, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரும், இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி, கிரிக்கெட் தெரியாதவர்களை வைத்து மானத்தை வாங்காதீர்கள் என நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று, தியாகராயர் க்ளப்பில் ‘காட்டுப்புறா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ்.
இவர் தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் இசையை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே. செல்வமணி சிறப்புறையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது; “என் மனைவி ரோஜாவின் அண்ணன் மகள் என்னிடம் கேட்டாள். ‘என்ன மாமா உங்க ஆளுங்க. ஊத்திக்கிட்டு வந்துட்டாங்க போல..’ அவள் என்னைக் கேலி செய்தாள்”.
“செலிபிரிட்டி கிரிக்கெட்டில் நம் நடிகர்கள் சரியாக ஆடாததைத்தான் அப்படிச் சொல்லிக் காட்டினாள். யாரோ நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைக்கிறார்கள். தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள்”.
“நம் மானம் போகிறது. நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள் .ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள். இப்படி மானத்தை வாங்காதீர்கள்” என ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள்விடுத்துள்ளார்.