கர்நாடக – ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் தரப்பு வாதத்தைக் கேட்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த, மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய் ஆகியோர் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றுடன் கர்நாடக அரசு தரப்பில், வழக்கறிஞர் ஆச்சார்யா தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதனையடுத்து, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வாதம் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், விசாரணையின் போது, அன்பழகன் தரப்பு வாதத்தைக் கேட்க ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனை அடுத்து, வாதங்களைத் தாக்கல் செய்ய அன்பழகன் தரப்பில் புதிதாக வாதம் செய்ய ஒன்றும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கர்நாடக அரசு போதுமான அளவு வாதங்களை எடுத்து வைத்துள்ளதாகவும், ஏற்கெனவே தாக்கல் செய்த ஆவணங்களை கருத்தில் கொள்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.