கோலாலம்பூர் – நஜிப்பிடமிருந்து கிட்டத்தட்ட 7 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதை சிஐஎம்பி தலைவரும், நஜிப்பின் சகோதரருமான நஜிர் அப்துல் ரசாக் ஒப்புக்கொண்டுள்ளார்.
‘த வால்ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிகைக்கு இதை எழுத்துப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சித் தலைவரின் ஆலோசனைகளுக்கு இணங்க, ஆளுங்கட்சி அரசியல் தலைவர்களுக்கு அப்பணத்தை வங்கி ஊழியர்கள் பட்டுவாடா செய்தனர் என்று நஜிர் தனது எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அப்பணம் மலேசிய நிறுவனங்களிடமிருந்தும், தனிநபர்களிடமிருந்தும் தான் திரட்டிக் கொடுத்த தேர்தல் நிதி என்றே நம்பும் நஜிர், அந்த நிதி வேறு வழியில் வந்திருந்தால் அது பற்றித் தனக்கு தெரியாது என்றும் வால்ஸ்ட்ரீட்டிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த நிதி வேறு வழியில் வந்திருப்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று வால்ஸ்ட்ரீட் செய்தி நிறுவனத்திடம் நஜிர் தெரிவித்ததாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், “பணமாகப் பெறப்பட்ட அந்த மொத்தத் தொகையும், கட்சித் தலைவரின் (நஜிப்) ஆலோசனைகளின் படி, பலருக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, மிச்சம் எதுவுமின்றி அக்கணக்கு மூடப்பட்டது” என்றும் நஜிர் தெரிவித்துள்ளதாக வால்ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.