லக்சம்பெர்க் – ஐரோப்பிய கண்டத்தின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று லக்சம்பெர்க். வரிவிலக்குக் கொள்கைகளால் உலகப் பெரும் வணிகர்களின் பணப் பரிமாற்றங்கள் இந்த நாட்டைத் தளமாகக் கொண்டுதான் செயல்படுத்தப்படுகின்றது.
தற்போது இந்த நாட்டின் சட்ட அலுவலகமும் 1எம்டிபி நிறுவனத்திற்கு எதிராக முறைகேடான வகையில் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்த விசாரணைகளைத் தொடங்கியிருக்கின்றது.
சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, லக்சம்பெர்க் ஆகிய நாடுகளில் 1எம்டிபி வைத்திருந்த வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் தவறான முறையில் பணம் கையாளப்பட்டிருக்கின்றன என்ற புகார்களைத் தொடர்ந்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
2012ஆம் ஆண்டுக்கும் 2013க்கும் இடையில் நடைபெற்ற நான்கு பணப் பரிமாற்றங்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் பணப் பரிமாற்றங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் 2012 மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடப்பட்ட போண்ட் எனப்படும் பணப் பத்திரம் தொடர்பில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் லக்சம்பெர்க் நாட்டின் சட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகின்றது என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
4 பில்லியன் அமெரிக்க டாலர் முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பில் சுவிட்சர்லாந்தும் இதே போன்ற விசாரணைகளை 1எம்டிபிக்கு எதிராக நடத்தி வரும் நிலையில், சிங்கப்பூர் அரசாங்கமும் அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் சிலவற்றை முடக்கி வைத்திருக்கின்றது.